விளாத்திகுளம் அருகே குடியிருப்பு பகுதி வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - 16 பேர் கைது

விளாத்திகுளம் அருகே குடியிருப்பு பகுதி வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
விளாத்திகுளம் அருகே குடியிருப்பு பகுதி வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு - 16 பேர் கைது
Published on

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே வேம்பாரை அடுத்த பெரியசாமிபுரம் கடற்கரையில் தனியாருக்கு சொந்தமான படகு கட்டும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கு பெரியசாமிபுரம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன்புள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து உயர் அழுத்த மின்சாரம் வழங்குவதற்காக மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

இதற்கிடையே கிராமத்தின் மையப்பகுதியான சர்ச் தெரு வழியாக உயர் அழுத்த மின்கம்பிகள் செல்வதற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்வாரிய ஊழியர்கள் உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்க வந்தபோது, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பணி கைவிடப்பட்டது. இதுதொடர்பாக அப்பகுதியினர் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பெரியசாமிபுரத்துக்கு மின்வாரிய ஊழியர்கள் மீண்டும் சென்று, தனியார் படகு நிறுவனத்துக்கு உயர் அழுத்த மின் கம்பிகள் மூலம் இணைப்பு வழங்க ஏற்பாடு செய்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சூரங்குடி போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 16 பேரை கைது செய்து, விளாத்திகுளம் தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். தொடர்ந்து படகு கட்டும் நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com