

வளவனூர்,
புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் தாமரைக்குள தெருவை சேர்ந்தவர்கள் அன்பழகன் மகன் சதீஷ் (வயது 21), குணசேகரன் மகன் செந்தில்வேலன் (20). இவர்களில் சதீஷ் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். செந்தில்வேலன் புதுச்சேரி வேலம்பட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நண்பர்களான இவர்கள் இருவரும் புதிதாக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்காக, நேற்று மதியம் புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை செந்தில்வேலன் ஓட்டினார்.
விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே மதியம் 2.50 மணி அளவில் வந்த போது, முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்றனர்.அந்த சமயத்தில் எதிரே விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக செந்தில்வேலன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் சதீஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். செந்தில்வேலன் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செந்தில்வேலனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தில்வேலன் இறந்தார்.
விபத்து குறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க சென்ற போது அரசு பஸ் மோதி 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.