விருத்தாசலம் அருகே ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது

விருத்தாசலம் அருகே யூ டியூப் பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.
விருத்தாசலம் அருகே ‘யூ டியூப்’ பார்த்து துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது
Published on

விருத்தாசலம்,

விருத்தாசலத்தை அடுத்த ஆலடி அருகே உள்ள பாலக்கொல்லையில் நாட்டுத் துப்பாக்கி தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆலடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை பாலக்கொல்லை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு 2 பேர் நாட்டுத் துப்பாக்கி தயாரித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார், அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த பிலேந்திரன் மகன் ஸ்டீபன் (வயது 19), நரிக்குறவர் காலனியை சேர்ந்த சங்கர் மகன் விஜய்(28) என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பறவைகளை வேட்டையாடுவதற்காக நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க அவர்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி ஸ்டீபனும், விஜயும் யூ டியூப் சேனலை பார்த்து பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு நாட்டுத் துப்பாக்கி தயாரித்தது தெரியவந்தது. தொடர்ந்து ஆலடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், ஸ்டீபன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. யூ டியூப் பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைதான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com