வாலாஜாபாத் அருகே கருங்கற்களை வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் ஆர்.டி.ஓ. ஆய்வு

வாலாஜாபாத் அருகே கருங்கற்களை வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
வாலாஜாபாத் அருகே கருங்கற்களை வெட்டி கடத்துவதாக கிராம மக்கள் புகார் ஆர்.டி.ஓ. ஆய்வு
Published on

வாலாஜாபாத்,

வாலாஜாபாத் ஒன்றியம் பழைய சீவரம் ஊராட்சிக்கு உட்பட்டது சங்கராபுரம் கிராமம். இந்த கிராம பகுதியில் அமைந்துள்ள மலை குன்றுகளில் உள்ள கருங்கற்கள் சாமி சிலைகள் மற்றும் சிற்பங்களை செய்வதற்கு ஏற்றதாக உள்ளது. இந்த நிலையில் அரசு அனுமதி இல்லாமல் சமூக விரோதிகள் கருங்கற்களை வெட்டி மாமல்லபுரம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள சிற்ப கூடங்களுக்கு இரவு நேரங்களில் லாரிகளில் கடத்துவது தெரியவந்தது.

கருங்கற்கள் வெட்டி கடத்தப்படுவது குறித்து வாலாஜாபாத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் சங்கராபுரம் கிராம மக்கள், வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமியிடம் புகார் தெரிவித்தனர்.

கிராம மக்களின் புகாரை தொடர்ந்து ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி சங்கராபுரம் கிராமத்திற்கு நேரில் சென்று மலைக்குன்று பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது பல்வேறு இடங்களில் இருந்த குன்று பகுதிகளில் சாமி சிலைகளை செய்வதற்காக அரிய வகை கருங்கற்கள் வெட்டி கடத்துவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். அரசுக்கு அதிக வருவாய் தரக்கூடிய கருங்கற்கள் என்பதால் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தார். மேலும் அரசு அனுமதியின்றி கருங்கற்களை வெட்டி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறும், வெட்டி வைக்கப்பட்டுள்ள கருங்கற்களை கடத்த முடியாதபடி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டுமென சாலவாக்கம் போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

கிராம மக்களின் புகாரை ஏற்று உடனடியாக காஞ்சீபுரம் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி மேற்கொண்ட ஆய்வின் காரணமாக கடத்தப்பட தயார் நிலையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான அறிய வகை கருங்கற்கள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com