நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சங்கரலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் சர்வதேச உரிமை கழகத்தின் மாவட்ட செயலாளர் அய்யப்பன் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் பாளையங்கோட்டையில் விழா நடத்தி நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக கூறி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தின் முன்பு மேலப்பாளையம் சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அறக்கட்டளையினர் எங்களை தொடர்பு கொண்டு பார்வையற்றவர்களுக்கு கண்சிகிச்சை முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று கூறி பாளையங்கோட்டையில் விழா நடத்துவதாக அறிவித்து இருந்தனர். திடீரென நிர்வாகி ஒருவர் இறந்துவிட்டதாக கூறி விழாவை ரத்து செய்வதாகவும் கூறினர். ஆனால் இறந்ததாக கூறப்படுகிறவர் உயிரோடு உள்ளார். அவரை பிடித்து சென்று ஏன் இப்படி ஏமாற்றினீர்கள் என்று கூறி பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்து அவர் மீது புகார் செய்தோம்.நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த பார்வையற்றோரிடம் இருந்து புகைப்படம், ஆதார் அட்டை மற்றும் கைரேகை ஆகியவற்றை பெற்று உள்ளனர். இந்த ஆவணங்களை பயன்படுத்தி மோசடியாக பார்வையற்றோர் பள்ளி வளாகத்தில் தனியார் பெட்ரோல் பங்க் அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதை நாங்கள் எதிர்க்கிறோம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் மாவட்ட வக்கீல் அணி செயலாளர் மாரிமுத்து தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், அம்பை நகரசபையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொடர்ந்து பணி வழங்கவேண்டும். துப்புரவு பணியாளர் பணிகளை தனியாருக்கு டெண்டர் விடக்கூடாது என்று கூறி உள்ளனர்.நெல்லை கோடீஸ்வரன்நகர் மக்கள், தங்கள் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று கூறி மனு கொடுத்தனர். சமாதானபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகன் என்பவர் 3 சக்கர சைக்கிளில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தார். அந்த மனுவில், நான் சம்பாதித்த பணத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து வங்கியில் போட சொன்னேன். அவர் வங்கியில் போட்டு என்னிடம் வங்கி பாஸ்புத்தகத்தை காட்டினார் பின்னர் எனக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் பணத்தை எடுத்து என்னை ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com