நெல்லை மாநகராட்சி செலுத்திய கட்டணத்தில் முறைகேடு: மின்வாரிய ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்

நெல்லையில் மாநகராட்சி செலுத்திய கட்டணத்தில் முறைகேடு செய்த மின்வாரிய ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
நெல்லை மாநகராட்சி செலுத்திய கட்டணத்தில் முறைகேடு: மின்வாரிய ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம்
Published on

நெல்லை,

நெல்லை மாநகரில் உள்ள தெருவிளக்குகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் செலவு செய்யப்படும் மின்சாரத்துக்கு உரிய கட்டணம் ஆணையாளர் பெயரில் மின்வாரியத்துக்கு 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படுகிறது. இந்த கட்டணத்துக்கு உரிய பணம் காசோலையாக வழங்கப்படுகிறது. காசோலையை திரும்ப பணமாக்கும்போது மின்வாரிய அதிகாரிகள் அப்படியே செயல்படுத்தாமல், குழப்பத்தை ஏற்படுத்தி, பணத்தை சுருட்டியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் கருப்பசாமி, கணக்கீட்டாளர்கள் 3 பெண்கள் உள்பட மின்வாரிய ஊழியர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒரு உதவி செயற்பொறியாளர் இடமாற்றமும் செய்யப்பட்டு உள்ளார். இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த முறைகேட்டை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளிக்கொண்டு வந்த வக்கீல் பிரம்மா கூறியதாவது:-

பாளையங்கோட்டை தாமிரபரணி நகரில் போலீசாருக்கு 37 வீடுகள் கொண்ட குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இங்கு தலா 6 கிலோ வாட் மின்அழுத்தம் கொண்ட மின்இணைப்பு வழங்க கோரி ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ரூ.15 ஆயிரம் கட்டணம் செலுத்தப்பட்டது. ஆனால் அதனை மின்வாரிய ஊழியர்கள் கணினியில் 3 கிலோ வாட் மின்அழுத்த இணைப்பு என்று பதிவு செய்து ஒரு வீட்டுக்கு ரூ.7,500 மட்டுமே வாரிய கணக்கில் வரவு வைத்துக்கொண்டு, மீதியை சுருட்டி விட்டனர். இதுகுறித்து எனக்கு தகவல் கிடைத்தபோது, அதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி கேட்டேன். அதிகாரிகள் ஆய்வு செய்தபோது மோசடி நடந்திருப்பதை அறிந்தனர்.

மேலும் இதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது நெல்லை மாநகராட்சி சார்பில் செலுத்தப்படும் மின்கட்டணத்திலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

அதாவது, மாநகராட்சி சார்பில் தங்கள் வசம் உள்ள மின்இணைப்புகளுக்கு உரிய கட்டண தொகையை வங்கி காசோலையாக மொத்தமாக கொடுத்து, மின்இணைப்புகளின் எண்களையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் இதில் குறிப்பிட்ட மின்இணைப்பு எண்களில், ஒருசில மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக பதிவு செய்து அவற்றுக்கு பணம் செலுத்தாமல் விட்டு விடுகின்றனர். அதே நேரத்தில் மீதி இருக்கும் தொகையை எடுப்பதற்காக, கவுன்ட்டரில் பணம் செலுத்த வரும் பொதுமக்களின் வீட்டு இணைப்புகளுக்கு மாநகராட்சி காசோலை பணத்தை மாற்றம் செய்து உள்ளனர். பொதுமக்கள் கொடுக்கும் பணத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இந்த முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் இந்த நடவடிக்கை கண் துடைப்புக்காக எடுக்கப்பட்டதோடு, இந்த பிரச்சினையை மூடி மறைக்கவும் முயற்சி நடக்கிறது. இத்தகைய முறைகேடு நெல்லையில் மட்டும் நடைபெறுகிறதா? தமிழகம் முழுவதும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் செலுத்தும் பணமும் சுருட்டப்படுகிறதா? என்று தெரியவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com