நெல்லை கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய நிறுவனம் தொடக்கம் - 500 மென்பொருள் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு

நெல்லை கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 500 மென்பொருள் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
நெல்லை கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதிய நிறுவனம் தொடக்கம் - 500 மென்பொருள் என்ஜினீயர்களுக்கு வேலைவாய்ப்பு
Published on

நெல்லை,

நெல்லை கங்கைகொண்டானில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு அடோஸ் சின்டல் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தற்போது தனது கிளையை தொடங்கி உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் அடோஸ் குழுமத்தின் வர்த்தக தலைவர் சீன் நாராயணன், தலைமை வெளியீட்டு அலுவலர் ராம் சிங்கம்பள்ளி, தலைமை செயல் அலுவலர் ராகேஷ் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அடோஸ் சின்டல் நிறுவனம் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்துக்கு முன்னணியாக திகழ்கிறது. இந்தியாவில் எங்களது நிறுவனம் சென்னை, புனே மற்றும் மும்பையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு தமிழக அரசு நெல்லை கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவில் 200 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்தது. முதற்கட்டமாக அங்கு 100 ஏக்கரில் வளாக கட்டிடங்களை உருவாக்கி புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு துறைகளுக்கான மென்பொருள் உருவாக்கப்படும். குறிப்பாக வர்த்தக துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் மென்பொருள் அதிகமாக உருவாக்கப்படும். நெல்லை மையம் தனித்து இயங்கி உலகளாவிய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

முதல் கட்டமாக இந்த ஆண்டுக்குள் 500 மென்பொருள் என்ஜினீயர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும். இதில் நெல்லை பகுதியை சேர்ந்த புதிய என்ஜினீயர்கள் மற்றும் வெளியூர்களில் பணிபுரிந்து வரும் நெல்லை பகுதி என்ஜினீயர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதவிர கல்லூரி இறுதி பருவத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளையும் தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியும் வழங்குவோம். அதில் திறமையானவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு இங்கு 2,300 பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேட்டியின் போது வணிகப்பிரிவு தலைவர் சமீர் அரோரா உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com