இலவச மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு

இலவச மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
இலவச மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை அடுத்த இரண்டும் சொல்லான் கிராமம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 52). விவசாயி. இவருடைய தந்தை வேதநாயகம் பெயரில் கட்டாரங்குளம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அதில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் பொருத்தி விவசாயம் செய்வதற்காக, இலவச மின்சார இணைப்பு கேட்டு கடந்த 1990-ம் ஆண்டு வேதநாயகம் விண்ணப்பித்து இருந்தார். இதுதொடர்பாக மானூர் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு தபால் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து சாமுவேல், தந்தை வேதநாயகத்துடன் மானூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த உதவி பொறியாளர் நரேந்திரன் என்பவரை பார்த்து விவரம் கேட்டார். அப்போது தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தால் இலவச மின்சார இணைப்பு கொடுப்பதாக நரேந்திரன் தெரிவித்தார். ஆனால் சாமுவேல் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதும், ரூ.8 ஆயிரம் தந்தால் அனைத்து வேலையும் முடித்து தருவதாகவும், முதல் தவணையாக ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

சிறை தண்டனை

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சாமுவேல், நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து அப்போதைய லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மெக்லரின் எஸ்கால் தலைமையிலான போலீசார் ஏற்பாட்டில் பேரில், கடந்த 23-7-2007 அன்று சாமுவேல் மானூர் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று உதவி பொறியாளர் நரேந்திரனிடம் ரசாயன மை தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நரேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, லஞ்சம் வாங்கிய நரேந்திரனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சீனிவாசன் ஆஜராகி வாதாடினார்.

தற்போதைய விசாரணை இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் ஆகியோர் அரசு சாட்சிகளை கோர் ட் டில் ஆஜர் படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com