நெல்லை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாக ஆணையாளர் அறிவுறுத்தல்

நெல்லையில் நடைபெற்று வரும் ‘ஸ்மார்ட் சிட்டி‘ திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நெல்லை ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாக ஆணையாளர் அறிவுறுத்தல்
Published on

நெல்லை,

மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சி பகுதியில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. நெல்லை புதிய பஸ் நிலைய வளாகத்தில் நவீன அடுக்கு மாடி வாகனங்கள் நிறுத்தும் இடம், நவீன அறிவியல் தொழில்நுட்ப பூங்கா கட்டமைப்பு, பாதாள சாக்கடை திட்ட பணிகள், பசுமை பூங்கா கட்டுமான பணிகள், நுண் உரமாக்கல் மையத்தின் செயல்பாடுகள், பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், நேரு கலையரங்கு கட்டுமானப்பணிகள், நெல்லை சந்திப்பு பஸ் நிலைய விரிவாக்கம், தச்சநல்லூர் மண்டல அலுவலக வளாகத்தில் நவீன இருசக்கர வாகனம் நிறுத்தும் இடம், நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் புதிய வர்த்தக மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக ஆணையாளர் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட தலைவர் பாஸ்கரன் நேற்று ஆய்வு செய்தார். ஒவ்வொரு இடமாக சென்று அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் நீர்த்தேக்க மையத்திற்கு சென்று திட்டப்பணிகளை ஆய்வு செய்தார். அவர் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களுடன் ஆலோசனை செய்தார்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

பின்னர் நெல்லை மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. நகராட்சி நிர்வாக ஆணையாளர் பாஸ்கரன் கலந்துகொண்டு பேசியதாவது:-

நெல்லை மாநகராட்சியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப்பணிகள் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியின் காரணமாக காலதாமதம் ஆகிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் கட்டமைப்புகளில் கூடுதலாக பணியாளர்களை கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கட்டுமானப்பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் விரைந்து முடிக்க அலுவலர்கள், பொறியாளர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட பணியின் ஒப்பந்தக்காரர்கள் முழுவீச்சில் செயல்படுவது குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு அறிக்கையை எனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, ஸ்மார்ட் சிட்டி திட்ட மேலாண்மை இயக்குனரும், மாநகராட்சி ஆணையாளருமான கண்ணன், தலைமை நிர்வாக அலுவலர் நாராயணன் நாயர், நகராட்சி நிர்வாக சுற்றுச்சூழல் பொறியாளர் வைத்தீஸ்வரன், செயற்பொறியாளர்கள் பாஸ்கர், நாராயணன், மக்கள் நல அலுவலர் சரோஜா, செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் அண்ணா, உதவி ஆணையாளர்கள் சுகி பிரேமா, பிரேம் ஆனந்த், உதவி செயற்பொறியாளர்கள் பைஜு, சங்கரநாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com