நெல்லிக்குப்பம் பெண் கொலையில் கணவரின் நண்பர்கள் 8 பேர் கைது - கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சம்பவம்

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் நெல்லிக்குப்பம் பெண்ணை கொலை செய்ததாக கணவரின் நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லிக்குப்பம் பெண் கொலையில் கணவரின் நண்பர்கள் 8 பேர் கைது - கள்ளத்தொடர்பு விவகாரத்தில் சம்பவம்
Published on

வில்லியனூர்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கங்கா (வயது 27). இவரும் பக்கத்து ஊரான சொர்ணாவூரில் வேலைபார்த்து வந்த டிரைவர் ராஜசேகரும் (31) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

வேலை நிமித்தம் ராஜசேகர் அடிக்கடி வெளியூர்களில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் கங்காவுக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி தெரியவந்ததும் கங்காவை ராஜசேகர் கண்டித்துள்ளார். ஆனால் கங்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து விவாகரத்து பெறுவது என முடிவு செய்து இருவரும் கோர்ட்டில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் விசாரணையின்போது ஆஜராகாததால் வழக்கை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் கங்கா தனது குழந்தைகளுடன் வில்லியனூர் அருகே உள்ள மடுகரையில் குடியேறினார். இதை அறிந்த ராஜசேகர் மீண்டும் கங்காவை சந்தித்து பேசி சேர்ந்து வாழ்வது என முடிவு செய்து குழந்தைகளுடன் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அதிகாலை பால் வாங்கி விட்டு திரும்பிய போது கங்கா கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து மடுகரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கொலை சம்பவம் நடந்த போது வீட்டில் ராஜசேகர் தூங்கிக் கொண்டிருந்தார். இருந்தபோதிலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜசேகரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

போலீசில் ராஜசேகர் அளித்த வாக்குமூலத்தில், மனைவியின் நடத்தையால் அவமானமடைந்ததாக நண்பர்களிடம் தெரிவித்து அழுததாகவும், கங்காவை கொலை செய்ய உதவியதாகவும் தெரிவித்துள்ளார். மனைவியை நண்பர்களை ஏவி கொலை செய்ய ஏற்பாடு செய்து விட்டு வீட்டில் தூங்குவது போல் ராஜசேகர் நாடகமாடியதும் அம்பலமானது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

கங்காவை கொலை செய்த ராஜசேகரின் நண்பர்களான கலிதீர்த்தாள்குப்பம் பகுதியை சேர்ந்த சுகு என்கிற சுகுமாறன்(34), திருபுவனைபாளையம் அருள் என்கிற அருள்பிரகாசம்(26), ஜெகன்(27), மண்டக பட்டு பிரபாகரன் என்கிற பிரபா(27), அய்யப்பன்(27), மதகடிப்பேட் பாளையம் குணசீலன்(24), மடுகரை தசரதன் என்கிற தசா(27), திருபுவனை ரஞ்சித்(26) ஆகிய 8 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருபுவனை பகுதியில் உள்ள ஒரு சவுக்கு தோப்பில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பினர். ஆனால் சுற்றி வளைத்து சுகுமாறன் உள்பட 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கார், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com