நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைவதால் விசைப்படகுகளை அனுமதிக்க கூடாது

நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைவதால் பாக்ஜலசந்தி பகுதியில் விசைப்படகுகளை அனுமதிக்க கூடாது என்று, சேகர் எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் சேதமடைவதால் விசைப்படகுகளை அனுமதிக்க கூடாது
Published on

தஞ்சாவூர்,

பட்டுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.சேகர் தலைமையில் மீன்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன், அதிராம்பட்டினம் நகர அ.தி.மு.க. செயலாளர் பிச்சை, காரையூர் கிராம தலைவர் ரத்தினம் ஆகியோர் முன்னிலையில் அதிராம்பட்டினம் காரையூர் தெரு, காந்திநகர், ஆறுமுககிட்டங்கித்தெரு, தரகர் தெருவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் ஆண்டாண்டு காலமாக மீன்பிடித்தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்ட ஏழை நாட்டுப்படகு மீனவர்கள் ஆவோம். நாங்கள் தொழில் செய்யும் இடம் ஆழ்கடல் அல்ல. பாக்ஜலசந்தி என்னும் வளைகுடா பகுதியில் தான் மீன் பிடித்து வருகிறோம். இது ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்ய தகுதியான பகுதியும் அல்ல. ஆனால் கடந்த 12-ந்தேதி முதல் இன்று வரை ரூ.20 லட்சம் மதிப்புடைய வலைகளை விசைப்படகுகளினால் இழந்துள்ளோம்.

வலைகள் சேதம்

இது குறித்து மீன்துறை உதவி இயக்குனருக் கும் தெரிவித்துள்ளோம். நாகை மீனவர்களாலும், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் விசைப்படகு மீனவர்களாலும் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறோம். நாகை விசைப்படகு மீனவர்களால் எங்களுடைய மீன்பிடி வலைகள் சேதம் அடைகிறது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலை போன்றவற்றை உபயோகித்து கடல்வாழ் உயிரினங்களை முற்றிலும் அழித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் நாங்கள் மீன்பிடி தொழில் செய்ய எப்படி இயலும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க தான் விசைப்படகுதாரர்களுக்கு அரசு சலுகைகளை வழங்கி உள்ளது. எனவே கலெக்டர் எங்களுடைய கேர்ரிக்கையை கருத்தில் கொண்டு இரட்டைமடி, சுருக்குமடி வலைகளை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்வதோடு நாகை மீனவர்கள் பாக்ஜலசந்தியில் மீன்பிடி தொழில் செய்வதை தடுத்து நிறுத்தி எங்களை வாழவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தடுத்து நிறுத்த வேண்டும்

கோடியக்கரை முதல் பாக்ஜலசந்தியில் விசைப்படகுதாரர்களுக்கு 3 நாட்களும், நாட்டுப்படகுமீனவர்களுக்கு 4 நாட்களுமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் உள்ளது. ஆனால் பாக்ஜலசந்தியில் நாகை மீனவர்கள் வாரம் 7 நாட்களும் தொடர்ச்சியாக மீன்பிடி தொழில் செய்வதால் எங்களுடைய மீன்பிடி வலைகள் முற்றிலும் சேதம் ஏற்படுகிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com