அதிகாரிகள் மீது அதிருப்தி: புதுவை அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து - பாதியில் முடிந்ததால் பரபரப்பு

புதுவை அமைச்சரவை கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்து இந்த கூட்டம் பாதியில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் மீது அதிருப்தி: புதுவை அமைச்சரவை கூட்டம் திடீர் ரத்து - பாதியில் முடிந்ததால் பரபரப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று மாலை 6 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் துறையின் செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த கூட்டத்தில் இலவச அரிசி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் அதிகாரிகள் அனைத்து கோப்புகளையும் முழுமையாக தயாரிக்காமலும், 9 கோப்புகளை மட்டுமே எடுத்து வந்ததாகவும் தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.

புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எனவே கோப்புகள் அனைத்தையும் முழுமையாக தயாரித்து எடுத்து வர வேண்டும். மீண்டும் அமைச்சரவை கூட்டம் வருகிற 26-ந் தேதி நடத்தப்படும். அதற்குள் கோப்புகளை முழுமையாக தயாரித்து கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே ரத்து செய்யப் பட்டது. வழக்கமாக நள்ளிரவு வரை நடைபெறும் இந்த கூட்டம் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஒரு மணி நேரத்திலேயே முடிவடைந்தது. இதனால் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com