புதுவை அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்

மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க புதுவை அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று சந்திரபிரியங்கா எம்.எல்.ஏ. கூறினார்.
புதுவை அரசு ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும்
Published on

காரைக்கால்,

காரைக்கால் நெடுங்காடு(தனி) தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக காரைக்கால் வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி என்னை விமர்சனம் செய்திருந்தார். அதுபோன்று கோட்டுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் கமலக்கண்ணன், இந்த தொகுதி எம்.எல்.ஏ.(நான்) தங்களை சந்திப்பதில்லை என்றும், அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்றும் கூறியுள்ளார். எனது தொகுதி மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

மக்கள் சந்திக்கும் எந்தவொரு அடிப்படை பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டியது எம்.எல்.ஏவான எனது கடமை. எனது கோரிக்கைகளை நான் அரசிடம் பலமுறை வலியுறுத்தி உள்ளேன். ஆனால் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்காமல் ஆட்சியாளர் களுடன் அரசு விழாக்களில் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களில் ரூ.21 கோடி செலவில் பணிமனை கட்டிடங்கள் கட்ட சமீபத்தில் முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டி உள்ளார். இந்த பணிமனை கட்டிடங்களால் எங்களுக்கு எந்தவித பயனும் இல்லை, இதற்கு செலவிடும் தொகையைக் கொண்டு மீனவ கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கலாம் என்று மீனவ கிராம மக்களே கூறுகின்றனர்.

தற்போதைய நிதி நிலைமையில் ரூ.21 கோடி என்பது புதுச்சேரி அரசுக்கு பெரும் தொகையாகும். இதனை மீனவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த செலவிட்டால் அதை வரவேற்கலாம். குறிப்பாக மீனவ கிராமங்களுக்கு முறையான சாலை மற்றும் உட்புற சாலை வசதி இல்லை.

சுனாமி பாதித்த போது போடப்பட்ட சாலைகள் அதன் பிறகு செப்பனிடப்படாமல் உள்ளன. மீனவ கிராமங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. எனவே சாலை வசதி, மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தரலாம். மீனவர்கள் பிடித்துக் கொண்டு வரும் மீன்களை பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்ச்சாதன கிடங்குகளை அமைத்து தரலாம். மீனவ கிராமங் களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்கலாம்.

அரசு திட்டங்களை வகுக்கும்போது சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏக்களின் கருத்துகளையும் கேட்க ஆட்சியாளர்கள் முன்வருவதில்லை. எனவே ஆட்சியாளர்கள் என்மீது தேவையில்லாமல் விமர்சனம் செய்வதை தவிர்த்து விட்டு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், நடைமுறையில் இருந்து வரும் நலத்திட்டங்களை தடையில்லாமல் செயல்படுத்தவும், சம்பந்தப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.விடம் கலந்து பேசி ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்த புதுவை அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com