பெங்களூருவில் வைரசை கட்டுப்படுத்த புதிய நடைமுறை: மாநகராட்சி நிர்வாகம் முடிவு

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கொரோனா தலைதூக்கி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் புதிய நடைமுறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் வைரசை கட்டுப்படுத்த புதிய நடைமுறை: மாநகராட்சி நிர்வாகம் முடிவு
Published on

பெங்களூரு,

கர்நாடத்தின் தலைநகரான பெங்களூருவில் ஊரடங்கு காலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே வேளையில் கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. பெங்களூருவில் இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 82 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகரில் தலைதூக்கி வரும் கொரோனாவால் நகரவாசிகளும், சுகாதாரத்துறையும், அரசும், மாநகராட்சி நிர்வாகமும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதை தடுக்க சுகாதாரத்துறை பல்வேறு பரிந்துரைகளை மாநகராட்சிக்கும், அரசுக்கும் வழங்கி வருகிறது. முன்பு கொரோனா பாதித்த நபரின் வீடு முழுவதும் கிருமிநாசினி தெளித்து, சீல் வைக்கப்பட்டு வந்தது. இதை மாற்றி தற்போது ஒரு நபர் கொரோனா பாதித்தால், அவர் வசித்து வரும் தெரு முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளித்து சீல் வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து வருகிறது. அதுபோல் கொரோனா பரவலை தடுக்க பரிசோதனையை அதிகரிக்கவும் திட்டம் வகுத்து உள்ளது.

மேலும் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தவும் மாநகராட்சி முன்வந்தது. ஆனால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என முதல்-மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளது.

அதாவது வீடுகளில் இருந்து வெளியே வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு ரூ.200 அபராதம் வசூலித்து வருகிறது. இதுவே கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் சுற்றுபவர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

அதுபோல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வெளியே சுற்றினால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவற்றை கண்காணிக்க மார்ஷல்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், ஆஷா திட்ட ஊழியர்கள், தன்னார்வலர்களை பணி அமர்த்த மாநகராட்சி ஆலோசித்து உள்ளது. மேலும் செல்போன் பயன்பாடு, வாட்ச் சிஸ்டம், ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்டவை மூலமும் தனிமை நபர்களை கண்காணிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் இன்னும் சுகாதாரத்துறை, போலீஸ் துறையில் இந்த திட்டத்தை செயல்படுத்த இசைவு தெரிவிக்கவில்லை. இந்த இரு துறையும் பச்சைக்கொடி காட்டினால், கொரோனாவை கட்டுப்படுத்தும் புதிய நடைமுறைகளை மாநகராட்சி தீவிரமாக செயல்படுத்தும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com