ரூ.3 கோடியில் புதிய அறிவியல் பூங்கா ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்

திருவண்ணாமலையில் ரூ.3 கோடியில் புதிய அறிவியல் பூங்காவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
ரூ.3 கோடியில் புதிய அறிவியல் பூங்கா ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வேங்கிக்கால் கிராம ஊராட்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் அமைந்துள்ள ஏரிக்கரை அருகில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக மாநில நிதி குழு, ஊராட்சி ஒன்றிய பொது நிதி, கனிமங்கள் மற்றும் சுரங்கள் நல நிதி, சமூக பொறுப்பு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.3 கோடி மதிப்பில் புதிய அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

அதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன், முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பா.ஜெயசுதா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, கல்வெட்டை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ. மற்றும் அரசு ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள் அறிவியல் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள நடைபாதை, உடற்பயிற்சி உபகரணங்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த பொருட்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து அமைச்சர்கள் முன்னிலையில் பள்ளி மாணவர்களின் மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சி நடத்தி காண்பிக்கப்பட்டது. மேலும் அறிவியல் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள திறந்தவெளி அரங்கத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களின் வீணை இசைக் கச்சேரி, கோலாட்டம், விழிப்புணர்வு நடனம் ஆகிய நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் பள்ளி மாணவர்களுடன் பார்த்து ரசித்தனர்.

முன்னதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இந்த அறிவியல் பூங்கா சிறப்பான பூங்காவாக எங்கள் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கும் இந்த மாதிரியான அறிவியல் பூங்கா அமைக்கப்படவில்லை. அறிவியல் பூங்கா அமைவதற்கு காரணமாக இருந்த அமைச்சர், கலெக்டர், ஊரக வளர்ச்சித் துறையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக கலெக்டரின் முயற்சியால் அற்புதமான அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரிய பூங்காக்கள் அதிக செலவில் அமைக்கப்பட்டிருந்தாலும், திருவண்ணாமலை வேங்கிக்காலில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா ரூ.3 கோடியில் குறைந்த செலவில் அமைக்கப்பட்டிருந்தாலும் நிறைவாக இருந்தது.

மாணவர்களிடையே அறிவியல் குறித்த அடிப்படை அறிவினை முறைசாரா வகையில் ஏற்படுத்துவதே அறிவியல் பூங்காவின் முக்கிய நோக்கமாகும். மாணவர்கள் எளிதில் அணுகும் வகையில் அறிவியல் உபகரணங்கள் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை துண்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி முறையில் அல்லாது விளையாட்டு முறையில் அறிவியல் சம்பந்தமான நுணுக்கமான விவரங்களை அறிந்துகொள்ள அறிவியல் பூங்கா பெரிதும் உதவுகிறது.

அறிவியல் பூங்காவில் எந்திர பொறியியல், ஒளி, ஒலி, வெப்பம், இயற்பியல், உயிரியியல், வான்வெளியியல் சம்பந்தமான அறிவியல் மாதிரி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவின் சிறப்பு அம்சமாக அரைவட்ட திறந்தவெளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் அறிவியல் சம்பந்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் கருத்து பட்டறைகள், பேச்சுபோட்டி மற்றும் இதர கலைநிகழ்ச்சிகள் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களிடையே அறிவியல் சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்திட ஒருகாரணியாக அமையும். இதனை தவிர்த்து சிறார்கள், மாணவர்கள், மூத்தகுடிமக்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் நடைமேடை ஆகியன அமைக்கப்பட்டு தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் திருவண்ணாமலை காந்திநகர் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத் தலைவர் பீரங்கி ஜெ.வெங்கடேசன், திருவண்ணாமலை நகர்புற கூட்டுறவு வங்கி தலைவர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சிவக்குமார், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் மாலிக், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் தொப்பளான், ஆணாய்பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவர் தருமராஜ், முனனாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தென்மாத்தூர் கலியபெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com