கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை இன்று நள்ளிரவு நடக்கிறது

குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு நடக்கிறது.
கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை இன்று நள்ளிரவு நடக்கிறது
Published on

நாகர்கோவில்,

ஆங்கில புத்தாண்டு 2020 நாளை (புதன்கிழமை) பிறக்கிறது. இதையொட்டி உலகம் முழுவதும் உள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜெலிக்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது.

புனித சவேரியார் பேராலயம்

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11 மணிக்கு ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதேபோல் திருத்துவபுரம் மூவொரு இறைவன் ஆலயத்தில் குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஜெரோம் தாஸ், மார்த்தாண்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் அருட்பணியாளர் ஜோஸ் பிரைட் புத்தாண்டு திருப்பலியை நிறைவேற்றுகிறார்கள்.

இதுபோல் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலம், நாகர்கோவில் அசிசி ஆலயம், குளச்சல் புனித காணிக்கை மாதா ஆலயம், புன்னைநல்லூர் லூர்து அன்னை ஆலயம், களியக்காவிளை அந்தோணியார் ஆலயம், மார்த்தாண்டம் சவேரியார் ஆலயம் ஆகியவற்றிலும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறப்பு பிரார்த்தனைகள் நடக்கிறது.

வாழ்த்துகள்

அதேபோல் நாகர்கோவிலில் உள்ள ஹோம் சர்ச் உள்பட சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும், பெந்தேகோஸ்தே, சீரோ மலபார், இரட்சணிய சேனை உள்பட பல்வேறு சபை ஆலயங்களிலும் புத்தாண்டு ஆராதனைகள் நடக்கின்றன.

பிரார்த்தனை முடிந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். மேலும் புத்தாண்டை கேக் வெட்டி வரவேற்று உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

போலீஸ் பாதுகாப்பு

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. புத்தாண்டு கொண்டாடுவதற்காக புத்தாடைகள், இனிப்புகள் வாங்குவதற்கு கடை வீதிகளில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com