அடுத்தமாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவில் கோபுர கலச திருப்பணி தொடக்கம்

அடுத்த மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி தஞ்சை பெரியகோவில் கோபுர கலச திருப்பணி தொடங்கியது.
அடுத்தமாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம்: தஞ்சை பெரியகோவில் கோபுர கலச திருப்பணி தொடக்கம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜை வருகிற 27-ந் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 1-ந் தேதி மதியம் 12 மணி வரை நடக்கிறது. முதல் கால யாகசாலை பூஜை 1-ந் தேதி மாலை தொடங்குகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி பெரியகோவில் கோபுரங்கள், மதில்சுவர்கள், சன்னதிகள் சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. தெய்வங்கள் சுத்தப்படுத்தப்பட்டு, அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணி நடந்து வருகிறது. சிதைந்த சிற்பங்களும் சீரமைக்கப்படுகிறது. கோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் யாகசாலை பூஜைக்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

கோபுர கலச திருப்பணி

கோபுர கலச திருப்பணி மேற்கொள்வதற்காக கோபுரங்களில் இருந்து கலசங்கள் கீழே இறக்கப்பட்டுள்ளன. பெருவுடையார் சன்னதியில் உள்ள 216 அடி உயரமுள்ள மூலவர் கோபுரத்தில் 12 அடி உயரம், 4 அடி அகலத்துடன் கூடிய செம்பினால் ஆன கலசம் பொருத்தப் பட்டிருந்தது.

இந்த கலசத்தின் தற்போதைய தன்மை குறித்து அறிந்து கொள்ள கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கதிரியக்க பிரிவின் தலைவரும், விஞ்ஞானியுமான வெங்கட்ராமன் தலைமையில் மேனகா உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவினரும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினரும் ஆய்வு செய்தனர். பின்னர் நவீன கருவியின் உதவியுடன் கலசத்தின் தன்மை அறியப்பட்டது.

8 பாகங்கள்

இதையடுத்து கலசத்தை பிரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். கலசம் 3 பெரிய பாகங்களாலும், 5 சிறிய பாகங்களாலும் இணைத்து பொருத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு பாகத்தையும் தொழிலாளர்கள் பிரித்து தரைதளத்திற்கு கொண்டு வந்தனர். சிறிய பாகங்களை எல்லாம் கையில் தூக்கி கொண்டு கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரத்தின் வழியாக நடந்து வந்தனர். பெரிய பாகங்கள் கயிற்றின் மூலம் கீழே கொண்டு வரப்பட்டது.கலசத்தில் வரகு தானியங்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. இந்த வரகு தானியங்கள் 8 மூட்டைகள் கட்டப்பட்டு கீழே கொண்டு வரப்பட்டது. பிரிக்கப்பட்ட கலசத்தின் பாகங்கள் விநாயகர் சன்னதி அருகே திருசுற்று மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இரும்பு கம்பிகளால் ஆன பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. அந்த அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தங்கமுலாம்

இதேபோல் அம்மன் சன்னதி, முருகன் சன்னதி உள்ளிட்ட பிற சன்னதிகளில் உள்ள கோபுர கலசங்களும் பிரிக்கப்பட்டு திருசுற்று மாளிகைக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு கலசங்களை அளவிடும் பணி, சுத்தப்படுத்தும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி முடிந்தவுடன் கலசங்களுக்கு தங்கமுலாம் பூசப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி செல்வராஜ் இந்த பணியை மேற்கொள்கிறார். இவைகள் இன்னும் 15 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணி முடிந்தவுடன் மீண்டும் கலசங்கள் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகாரிகள் குழுவினர் முன்னிலையில் பொருத்தப்படும்.

கலசங்கள் பிரிக்கும் பணிக்கு முன்பாக விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com