நீலகிரி மாவட்டத்தில், இன்று 600 ஓட்டல்கள், 220 மருந்து கடைகள் அடைப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஜி.எஸ்.டி.வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 ஓட்டல்கள், 220 மருந்து கடைகள் இன்று அடைக்கப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், இன்று 600 ஓட்டல்கள், 220 மருந்து கடைகள் அடைப்பு
Published on

ஊட்டி

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்க வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இந்த முறை வருகிற ஜூலை மாதம் 1ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு ஓட்டல்கள், மருந்து கடைகள் நடத்துவோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த வரி விதிப்பை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில், ஓட்டல்கள், பேக்கரிகள், மற்றும் மருந்து கடைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) அடைக்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் முகமது ஜாபர் கூறியதாவது:

நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்த வரி நான்கு அடுக்காக, அதாவது 5, 12, 18, 28 என்ற சதவீதம் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த வரி விதிப்பால் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் பாதிக்கப்படும். விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். ஆகவே இதனை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள 250 ஓட்டல்கள், கூடலூரில் உள்ள 200 ஓட்டல்கள், கோத்தகிரியில் உள்ள 75 ஓட்டல்கள், குன்னூரில் உள்ள 75 ஓட்டல்கள் என மொத்தம் 600 ஓட்டல்கள் இன்று அடைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரி மாவட்ட மருந்து கடைகள் (பார்மசி) சங்கத் தலைவர் கோபால் கூறும்போது, ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் இன்று முழுவதும் மூடப்படுகிறது. அதன்படி, ஊட்டியில் உள்ள 80 மருந்து கடைகள், குன்னூரில் உள்ள 60 மருந்து கடைகள், கூடலூரில் உள்ள 40 மருந்து கடைகள், கோத்தகிரியில் உள்ள 40 மருந்து கடைகள் என மொத்தம் 220 மருந்து கடைகள் அடைக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com