நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி போலீஸ் காவல் முடிந்தது, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரின் போலீஸ் காவல் முடிவடைந்ததையடுத்து, அவர்கள் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி போலீஸ் காவல் முடிந்தது, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை செல்போனில் தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட அந்த கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலவலகக்தில் தீவிர விசாரணை நடந்தது.

இந்நிலையில் நேற்றுடன் இவர்களின் போலீஸ் காவல் முடிந்தது.

இதையடுத்து இவர்கள் ஆஜர்படுத்தப்பட வேண்டிய சாத்தூர் 2-வது மாஜிஸ்திரேட்டு கீதா விடுமுறையில் உள்ளதால் 2 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரமசிவம் முன்னிலையில் அவரது வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பரமசிவத்திடம் பேராசிரியர்கள் 2 பேரும் தங்களை விருதுநகரில் உள்ள மாவட்ட சிறைக்கு அனுப்புமாறு கேட்டனர். அதன்படி நீதிபதி பரமசிவம் அவர்கள் இருவரையும் மே 14-ந்தேதிவரை விருதுநகர் மாவட்ட சிறையில் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி இருவரும் விருதுநகர் மாவட்ட சிறைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சிறை உயர் அதிகாரிகள் அனுப்பிய தகவலின் அடிப்படையில் நிர்வாக காரணங்களுக்காக இருவரும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இந்த பிரச்சினையில் கவர்னர் நியமித்த உயர்நிலைக்குழு விசாரணை அதிகாரி சந்தானம் இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டி உள்ளதால் இருவரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் மேலும் விசாரணை தொடருமா என விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசங்கரலிங்கத்திடம் கேட்ட போது, இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அனைவரிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், மேலும் இது தொடர்பாக புது தகவல்கள் ஏதும் கிடைத்தால் விசாரணையை தொடர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியதில் இருந்து இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனாலும் பேராசிரியை நிர்மலாதேவியை தவிர பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகிய 2 பேர் மட்டுமே கைது நடவடிக்கைக்கு உள்ளாகி உள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் இருந்து உயர்நிலை அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதிலும் அவர்கள் விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

நிர்மலாதேவி குறிப்பிட்ட உயர் அதிகாரிகள் யார் என்பதற்கும், பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா இப்பிரச்சினையில் தொடர்புடைய உயர் அதிகாரிகளை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதற்கும் விடை காணப்படாமலேயே சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை முடிந்து விட்டது.

உயர்நிலை விசாரணைக்குழு அதிகாரி சந்தானத்தின் அறிக்கையிலாவது சி.பி.சி.ஐ.டி.போலீசாரின் விசாரணையை தாண்டி ஏதேனும் தகவல்கள் சொல்லப்பட்டிருக்குமா என்பது அவர்கள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டால் தான் தெரியவரும்.

இது பற்றி அரசு தரப்பில் தான் முடிவு எடுக்க வேண்டும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com