மதுரை சிறையில் இருக்கும் நிர்மலாதேவியிடம் இன்று விசாரணை, அதிகாரி சந்தானம் தகவல்

மதுரை மத்திய சிறையில் இருக்கும் நிர்மலாதேவியிடம் இன்று விசாரணை நடத்தப்போவதாக விசாரணை அதிகாரி சந்தானம் கூறினார்.
மதுரை சிறையில் இருக்கும் நிர்மலாதேவியிடம் இன்று விசாரணை, அதிகாரி சந்தானம் தகவல்
Published on

மதுரை,

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் நேற்று பிற்பகல் வந்து, பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக தனது விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணை இரவு 9 மணி வரை நடைபெற்றது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பல்கலைக்கழக விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், தொலை நிலைக் கல்வி இயக்குனர் விஜயதுரை ஆகியோரிடம் மட்டும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

வியாழக்கிழமை(இன்று) காலை மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியை சந்தித்து விசாரணை நடத்த இருக்கிறேன். இதுபோல், வெள்ளிக்கிழமை(நாளை) அருப்புக்கோட்டை சென்று விசாரணை நடத்த இருக்கிறேன். பல்கலைக்கழக பணியாளர் நன்னடத்தை விதியின் கீழ் துணைவேந்தர் எடுக்கும் நடவடிக்கை சரியானது தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பல்கலைக்கழகத்தின் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் விசாரணை அதிகாரி முன்பு ஆஜரானார். அப்போது அவரிடம் நிர்மலாதேவி தொலைநிலைக் கல்வி விடைத்தாள் திருத்தும் பணிக்கு எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?, எவ்வளவு நாட்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டார் என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.

இதுகுறித்து ராஜராஜன் கூறியதாவது:-

நிர்மலா தேவி கடந்த பிப்ரவரி மாதம் 15 முதல் 18-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டார். பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் அவர் விடைத்தாள் திருத்தும் பணிக்கு அழைக்கப்பட்டார். பேராசிரியரின் பணிமூப்பு பட்டியல் தேர்வாணையர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டு, பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும்பணிக்காக ஒருபோதும் அவர் என்னை சந்தித்தது கிடையாது. 133 விடைத்தாள்களை அவர் திருத்தம் செய்துள்ளார். பொதுவாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து பயணப்படி, அலவன்சு, தங்குவதற்காக பணம் ஆகியவை வழங்கப்படும். ஆனால் அவர் பல்கலைக்கழகத்தில் தங்கினாரா இல்லையா என்பது எனக்கு தெரியாது. அவரது வாட்ஸ்-அப் உரையாடல் தெளிவாக இல்லை. இந்த விவகாரம் குறித்து எனக்கு ஏதுவும் தெரியவில்லை. இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

விசாரணை அதிகாரியை சந்தித்து பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் பலர் மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், நிர்மலா தேவியின் வாட்ஸ்-அப் உரையாடலுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பில்லை. பல்கலைக்கழகத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற பொய் பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com