

பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ஒளி. சென்னை வேளச்சேரியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் நிஷா(வயது 30). திருமணமாகவில்லை. எம்.டெக். எம்.எஸ். பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவர் இயற்கையை ரசிப்பதற்காகவும், மன அமைதிக்காகவும் ஆண்டுதோறும் மலையேறும் பயிற்சிக்கு செல்வது வழக்கம்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்காக சென்ற நிஷா காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தார். நிஷாவின் தந்தை தமிழ்ஒளி மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். தாய் ஆனந்தி. நிரோஷா என்ற தங்கை உள்ளார்.
ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிப்பட்டிக்கு கொண்டு வரப்பட்ட நிஷாவின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.
காட்டுத்தீ விபத்தில் நிஷா இறந்த சம்பவத்தால் பாப்பிரெட்டிப்பட்டி பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினார்கள். நிஷாவின் இறுதி சடங்கு பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அரூர் உதவி கலெக்டர் பத்மாவதி, தாசில்தார் சரவணன், தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிஷாவுடன் பணியாற்றிய நிறுவன பணியாளர்கள், உறவினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.