ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும் என்று அரூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும்
Published on

அரூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட மாநாடு அரூரில் நடைபெற்றது. மாநாட்டையொட்டி அரூரில் வரவேற்புக்குழு தலைவர் விஸ்வநாதன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளானோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வரவேற்புக்குழு செயலாளர் தமிழ்க்குமரன் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்சியின் மாநில துணைச்செயலாளர் சுப்பராயன் கலந்து கொண்டு பேசுகையில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு மற்றும் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு ஆகியவை மக்களை ஏமாற்றி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகளால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழல்அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நிலவளம், மண்வளம், வனவளம் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஜனநாயகத்தை காப்பாற்ற ஜனநாயக சக்திகளும், இடதுசாரிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று கூறினார். இதில் மாநில துணைபொதுச்செயலாளர் வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பழனிசாமி, நஞ்சப்பன், மாவட்ட செயலாளர்கள் தேவராசன், மோகன், மாவட்ட நிர்வாகி மாதேஸ்வரன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆகியவற்றை தொடங்க வேண்டும். இண்டூர், சித்தேரி ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியை சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களையும் மேம்படுத்த வேண்டும்.

தர்மபுரியில் இருந்து மொரப்பூர், அரூர், தீர்த்தமலை வழியாக திருவண்ணாமலைக்கு புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும். தீர்த்தமலையை சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமப்புற பகுதிகளுக்கும் கூடுதலாக டவுன் பஸ்களை இயக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com