வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அக்கறை செலுத்தவில்லை - தமிழக அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

“கொரோனா ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அக்கறை செலுத்தவில்லை” என்று தமிழக அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க அக்கறை செலுத்தவில்லை - தமிழக அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
Published on

கோவில்பட்டி,

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து நடத்துவதிலும், அங்கு மக்களை வரவழைப்பதற்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுப்பதிலும்தான் அக்கறை செலுத்துகிறது. மாறாக கொரோனா ஊரடங்கு காரணமாக, வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்பதில் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.

ஊரடங்கால் வேலையில்லாத நிலையில் வெளிநாடுகளில் மக்கள் தவித்து வருகின்றனர். மாணவர்கள் தங்குவதற்கும்கூட இடமில்லாமல் தவித்து வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்துக்கு ஓரிரு விமானங்கள்தான் இயக்கப்படுகிறது.

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளிமாநிலங்களின் வழியாக தமிழத்துக்கு நீண்ட தூரம் பயணித்து வர வேண்டிய நிலை உள்ளது. வெளிநாடுகளில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தி தனிமைப்படுத்தி, நலமுடன் இருந்தால் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கிறார்கள். இதேபோன்று தமிழக அரசும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும்.

கொரோனா பாதிப்புகளை மத்திய அரசு ஒரு வாய்ப்பாக கருதி, மாநில அரசின் உரிமைகளில் தொடர்ந்து தலையிட்டு கொண்டு இருக்கிறது. இது மிகவும் தவறான ஒன்றாகும். இதனை அனைத்து மாநிலங்களும் எதிர்க்க வேண்டும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com