

குடிமராமத்து திட்டம்
தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று பவானியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக விவசாயிகள் பாறை நிலமாக இருந்தாலும் அதில் மண்ணை கொட்டி விவசாயம் செய்து விடுவார்கள். ஆனால் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியுமா? அதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக விவசாயிகளின் நலனை காக்க குடிமராமத்து திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தினார். இதனால் தமிழகத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் இன்று மழைநீர் தேங்கியுள்ளது. நிலத்தடி நீராதாரமும் பெருகியுள்ளது. நீர் ஆதாராத்தை பெருக்குவதே தமிழக அரசின் நோக்கம்.
மானிய கடன்
விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள், பயிர் கடன், விவசாயக்கடன், உரம், சொட்டு நீர் பாசனம், டிராக்டர், கலப்பை, விதைகள், கறவை மாட்டுக்கு கடன், விலையில்லா ஆடு, கோழி என எத்தனையோ திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ளது. பவானி பகுதியில் 25 தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டும், அதற்கான இடங்கள் தேர்வு செய்ய முடியாமல் உள்ளது.
நீதியரசர்கள் வேதனை
மாசு கட்டுப்பாடு வாரியம் ஊழல் வாரியமாக மாறி விட்டது என நீதியரசர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். இது அவர்கள் கருத்து. கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலக்கிறது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாயப்பட்டறைகள் இல்லை
அமராவதி ஆற்றங்கரை பகுதியில் சாயப்பட்டறைகளே இல்லை. கொடைக்கானல் முதல் கரூர் வரை பெரிய தொழில் நிறுவனங்கள் இல்லை. இதனால் சாயக்கழிவு கலப்பதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனாலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள் தற்போது விசாரணையில் இறங்கி உள்ளனர். விசாரணை முடிவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
குண்டர் சட்டம்
நீர்நிலைகளில் மாசு கலக்கும் நிறுவன உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுவரை அந்த மாதிரியான கடுமையான குற்றங்களை எந்த நிறுவனமும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.