தீபாவளிக்கு இலவச அரிசி, துணி இல்லை: ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.6 ஆயிரம் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தீபாவளி பண்டிகைக்கு இலவச துணிகள், அரிசி போன்றவை வழங்கப்படாததால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.6 ஆயிரம் வழங்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
தீபாவளிக்கு இலவச அரிசி, துணி இல்லை: ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.6 ஆயிரம் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
Published on

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காமராஜ் நகர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வாக்காளர்களுக்கு பணம், இலவச கேபிள் இணைப்பு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள ஏர்கூலர் பெற்றுக்கொள்ள கூப்பன் வழங்கினார்கள். இதுதொடர்பாக புகார் செய்தாலும் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டரிடம் நானே புகார் தெரிவித்த பின்னர்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வாக்குப்பதிவுக்கு முன்பாகவே நாங்கள் காங்கிரஸ் வேட்பாளரை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பினோம். தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் நீதிமன்றத்தை அணுகுவோம்.

ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு தரமான பொருட்கள் மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க அரசு சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. அதேபோல் இலவச அரிசி, சர்க்கரை, துணிகள் வழங்கப்படவில்லை.

தீபாவளிக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் அவற்றை வழங்குவதும் இயலாத காரியம். எனவே அனைத்து குடும்பத்தினருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் தலா ரூ.6 ஆயிரம் வீதம் செலுத்த வேண்டும்.

தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் டெங்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் பரவி வருகின்றன. அதிலிருந்து மக்களை காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறையினால் போடப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. போர்க்கால அடிப்படையில் அவற்றை சீரமைக்க வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்புகளை நீக்கவேண்டும்.

ஹெல்மெட் தொடர்பாக கவர்னரும், முதல்-அமைச்சரும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர். கவர்னர் புதுச்சேரி போலீசார் மீது நம்பிக்கையின்றி சி.பி.ஐ.யின் கிளையை புதுச்சேரியில் திறக்கவேண்டும் என்கிறார். எந்தெந்த குற்ற வழக்குகளில் போலீசார் சரியாக செயல் படவில்லை என்பது குறித்து 10 காரணங்களை அவர் வெளியிடவேண்டும். இல்லை யெனில் ஆட்சியாளர்களை மிரட்டுவதாகவே அ.தி.மு.க. குற்றஞ்சாட்டும். அதை மக்களுக்கு தெரிவிப்பது கவர்னரின் கடமை.

புதுவை அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 80 மது பார்களில் தொடர் நஷ்டம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக கவர்னர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வருமான இழப்புக்கு நிர்வாக சீர்கேடும், கவர்னர், முதல்-அமைச்சரும்தான் காரணம்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com