ராசிபுரம் நகராட்சியில் புதிதாக கொரோனா தொற்று இல்லை: அமைச்சர் சரோஜா தகவல்

ராசிபுரம் நகராட்சியில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று அமைச்சர் சரோஜா கூறினார்.
ராசிபுரம் நகராட்சியில் புதிதாக கொரோனா தொற்று இல்லை: அமைச்சர் சரோஜா தகவல்
Published on

ராசிபுரம்,

ராசிபுரம் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக அளிக்கப்படும் உணவு மற்றும் தூய்மை பணிகள் குறித்து சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆய்வு செய்தார். அப்போது அவர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். பின்னர் அம்மா உணவகத்திற்கு தேவையான உணவுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக நிதிஉதவி (காசோலை) மற்றும் முட்டைகளை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குணசீலனிடம் வழங்கினார்.

இதையடுத்து ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன், ஈஸ்வரன் கோவில், பொன்வரதராஜ பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில்களின் அர்ச்சகர்களுக்கு காய்கறிகளுடன் கூடிய உணவு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.பி.யும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம், நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராசிபுரம் பகுதியில் சுகாதார பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளித்துவரும் ஒத்துழைப்பால் புதிதாக கொரோனா பரவல் எதுவும் இல்லை. ராசிபுரம் நகராட்சியில் 445 பேரிடம் சாம்பிள் எடுக்கப்பட்டு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி, பிள்ளாநல்லூர் தரம் உயர்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள், அவசர சிகிச்சைக்கான உபகரணங்கள் மருத்துவ சேவைக்கான கருவிகள் வாங்குவதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com