ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாரும் அசைத்து பார்க்க முடியாது

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாரும் அசைத்து பார்க்க முடியாது என்று தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
ஜெயலலிதாவின் ஆன்மா இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை யாரும் அசைத்து பார்க்க முடியாது
Published on

தர்மபுரி,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற அக்டோபர் மாதம் 7-ந்தேதி தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கே.சிங்காரம் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஆகிய 6 அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்கள்.

கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-

தமிழகத்தில் அ.தி.மு.க. என்னும் தொண்டர்கள் கட்சியை உருவாக்கிய எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதுடன் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கியவுடன் நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் எம்.ஜி.ஆரை, கருணாநிதி என்ன செய்திருப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது எம்.ஜி.ஆரின் தர்மம் வென்றது. அ.தி.மு.க. மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து வந்தது.

இதைத்தொடர்ந்து இந்தியாவிலேயே 3-வது பெரிய கட்சியாக அ.தி.மு.க.வை ஜெயலலிதா உருவாக்கினார். அவருடைய மறைவிற்கு பின்னரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசின் செயல்பாட்டை குறைகூறி கவிழ்த்து விடலாம் என்று ஒரு சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 7 மாதங்களாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும். முதல்-அமைச்சராக தான் வரவேண்டும் என்று துடித்து கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவால் நீண்டகாலம் பயனடைந்தவர்கள் இந்த கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதற்காக ஒருசில எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். அங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் தினமும் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு தொடர்ந்து நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று கூறி வருகிறார்கள். ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு ஜெயலலிதா இறப்பு குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை ஏற்றுக்கொண்டு ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா தமிழகத்தையே சுற்றி வருகிறது. எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா இருக்கும் வரை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசை யாரும் அசைத்து பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், முன்னாள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் கே.நல்லதம்பி நன்றி கூறினார். இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com