எந்தவித சிக்கலும் இல்லை அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது அமைச்சர் தங்கமணி பேட்டி

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் எந்தவித சிக்கலும் இல்லை எனவும், பலமாக இருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
எந்தவித சிக்கலும் இல்லை அ.தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது அமைச்சர் தங்கமணி பேட்டி
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்திற்கு புதிதாக 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மழை வருவதற்கு முன்பாகவே ஆய்வு கூட்டம் நடத்தி பாதிப்புகள் ஏற்படும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம். அளவுக்கு அதிகமாக மழை பெய்யாததால் மாவட்டத்தில் இதுவரை எந்த சேதாரமும் இல்லை. மழை காலம் என்பதால் மின் தேவை குறைந்து உள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகள், தொழிற்கூடங்கள் இயங்காததால் மின் தேவை குறைவாக தான் உள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு என்பது இல்லை.

மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு ஊக்க நிதி வழங்குவதாக கூறி உள்ளது. காற்றாலை உற்பத்தியாளர்கள், சோலார் மின்உற்பத்தியாளர்கள் என யார், யாருக்கு கொடுக்க வேண்டும் என மின்வாரியம் சார்பாக பட்டியல் கொடுத்துள்ளோம். அந்த பட்டியலின்படி மத்திய அரசே நேரடியாக கொடுத்து விடும்.

இன்று (சனிக்கிழமை) அரசு விழாவில் கலந்து கொள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தமிழகம் வருகை தர உள்ளார். கூட்டணி கட்சி என்ற முறையில், நாங்கள் அவரை வரவேற்க உள்ளோம். அ.தி.மு.க. கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. எங்களது கூட்டணி பலமாக தான் உள்ளது. பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகனின் வேல் யாத்திரைக்கு கோர்ட்டு தடை விதித்து உள்ளது. அதன்படி அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com