கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது; கலெக்டரிடம் விவசாயிகள் மனு

மொசுக்குத்திவலசு அருகே கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது; கலெக்டரிடம் விவசாயிகள் மனு
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது காங்கேயம் அருகே உள்ள நிழலி புள்ளக்காளிபாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறோம். அனைவரும் விவசாய கூலி வேலை செய்பவர்கள். நாங்கள் அனைவரும் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் பல ஆண்டு களாக 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் காங்கேயம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் எங்களுக்கு வடசின்னாரிபாளையம் பகுதியில் இடம் உள்ளது. அங்கு இடம் ஒதுக்கி தரப்படும் என உறுதியளித்தார். இதன் அடிப்படையில் நாங்கள் சாதி, வருமான சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை என அனைத்து ஆவணங்களும் இணைத்து காங்கேயம் தனி தாசில்தாரிடம் கொடுத்துள்ளோம்.

அனைத்து ஆவணங்களும் கிராம நிர்வாக அலுவலரால் விசாரணை செய்து கொடுக்கப்பட்டது. எனவே வீடு இல்லாத எங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி 20 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். முன்னதாக இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

இது போல் காங்கேயம் வட்டம் மறவபாளையம், மொசுக்குத்திவலசு ஊர்பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் எங்கள் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம் 5 சென்டில் இலவச மின் இணைப்பு கொண்ட கிணற்றை அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளார். இந்த கிணறு உள்ள பகுதி கீழ்பவானி ஆயக் கட்டுப்பகுதிக்கு உட்பட்ட தாகும். இந்த கிணற்றில் இருந்து பரஞ்சேர்வழி மற்றும் நால்ரோடு கிராமத்தில் உள்ள நிலங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்ல சுமார் 7 கி.மீ. நீளத்திற்கு குழாய் பதிக்க முற்பட்டுள்ளார்.

கீழ்பவானி ஆயக்கட்டுப் பகுதியில் இருந்து ஆயக்கட்டு இல்லாத பரஞ்சேர்வழி மற்றும் நால்ரோடு கிராமத்தில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வது சட்ட விரோதமாகும். இதனை தடுக்க வேண்டும். மொசுக்குத்திவலசு பகுதியில் நிலத்தடிநீர் எடுத்து வெளிப்பகுதிக்கு கொண்டு சென்றால், இந்த பகுதியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறு வறண்டு பொதுமக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.அத்துடன் விவசாய கிணறுகளும் வறண்டு போகும்.

எனவே கீழ்பவானி ஆயக்கட்டுக்கு உட்பட்ட தண்ணீரை வேறு பகுதிக்கு கொண்டு செல்லக்கூடாது. மேலும் அரசாணைகளுக்கு எதிராக ஆயக்கட்டுப்பகுதி தண்ணீரை ஆயக்கட்டில் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

முத்தூர் அருகே உள்ள நா.கரையூரை சேர்ந்த முதியவர்கள் சிலர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் கூலி வேலை செய்து வந்து கொண்டிருக்கிறோம். இதில் அதிகளவில் வருமானம் கிடைப்பதில்லை. இதனால் கடந்த 7 ஆண்டுகளாக மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 பெற்றுக்கொண்டிருந்தோம்.

இந்நிலையில் கடந்த 4 மாதமாக உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால் பெரும் சிரமத்தை சந்தித்து கொண்டிருக்கிறோம். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது ஆதார் இணைப்பு சரியாக இல்லாததால் உதவித்தொகையை நிறுத்தியதாக தெரிவிக்கிறார்கள். எனவே எங்களுக்கு உதவித்தொகை கிடைப் பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com