

புதுச்சேரி,
புதுச்சேரி சட்டசபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேரையும் சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர்கள் நுழைவாயிலில் போராட்டம் நடத்தினர். இதில் சங்கர் மயங்கி விழுந்தார்.
இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் அனுமதிக்காதது குறித்து தலைமை செயலாளரிடம் கவர்னர் கிரண்பெடி அறிக்கை கேட்டிருந்தார். மேலும் அந்த அறிக்கை வந்த உடன் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் தலைமை செயலாளர் நேற்று போலீசாரிடம் விசாரணை நடத்தி அறிக்கையை கவர்னருக்கு அனுப்பி வைத்தார். அந்த அறிக்கை தொடர்பாக கவர்னர் ஆய்வு செய்தார். பின்னர் அந்த அறிக்கையோடு சேர்த்து தனது முடிவையும் குறிப்பாக எழுதி மத்திய அரசுக்கு புகார் அனுப்பியுள்ளார். அந்த புகாரை ஆராய்ந்து மத்திய அரசு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.