நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு நாராயணசாமி அழைப்பு

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு நாராயணசாமி அழைப்பு
Published on

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்துக்கு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக நியமித்தது. இதற்கு புதுவையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசின் நேரடி நியமனத்தை எதிர்த்து முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டிலும் மத்திய அரசின் நியமனம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.

மேலும் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மாநில அரசின் பரிந்துரை தேவையில்லை என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஆளுங்கட்சி வட்டாரத்தில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை தொடர்ந்து இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூட்டியுள்ளார். இந்த கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு சன்வே ஓட்டலில் நடக்கிறது.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி அனைத்து எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நியமித்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு மக்களாட்சிக்கு எதிர்ப்பாகவும், மாநில மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளது. இந்த பிரச்சினை சம்பந்தமாக விவாதித்து அரசியல் ரீதியாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துகளை கூறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com