திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு நடந்து வந்த வடமாநில பெண்: உடலில் காயம் இருந்ததால் ஆதரவற்றோர் முகாமில் சேர்ப்பு

திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு வடமாநில பெண் ஒருவர் நடந்தே வந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால் ஆதரவற்றோர் முகாமில் சேர்க்கப்பட்டார்.
திருப்பூரில் இருந்து ஈரோட்டுக்கு நடந்து வந்த வடமாநில பெண்: உடலில் காயம் இருந்ததால் ஆதரவற்றோர் முகாமில் சேர்ப்பு
Published on

ஈரோடு,

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு பெண் தனியாக நடந்து வந்தார். அவர் மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த பெண் அசாம் மாநிலம் தேஜ்பூர் அமீன்பட்டியை சேர்ந்த அசீனாபேகம் (வயது 24) என்பதும், திருப்பூரில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்த அவர் தனது சொந்த மாநிலத்துக்கு செல்வதற்காக திருப்பூரில் இருந்து கடந்த 2 நாட்களாக நடந்தே வந்தது தெரிய வந்தது.

அவரது முகத்தில் உள்ள காயங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அதுபற்றி கேட்டனர். ஆனால் அந்த பெண் ஒருவித அச்சத்துடனே காணப்பட்டார். மேலும், அவருக்கு தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி தெரியவில்லை. அவர் அசாமி மொழியிலேயே பேசியதால் போலீசாருக்கும் முழுமையான விவரங்களை விசாரிக்க முடியவில்லை. அவரிடம் இந்தி மொழியில் போலீசார் பேசி விசாரித்தபோது, அந்த பெண்ணிடம் சிலர் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறி அழைத்து வந்ததும், அவர்கள் பெண்ணை தாக்கி செல்போன், பணத்தை பறித்துவிட்டு சென்றதும் தெரியவந்து உள்ளது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு தேவையான உணவை போலீசார் வாங்கி கொடுத்தனர். பிறகு அசீனாபேகத்தை ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் செயல்படும் ஆதரவற்றோர் முகாமில் கொண்டு சென்று போலீசார் சேர்த்தனர். அங்கு ஜீவிதம் அறக்கட்டளையை சேர்ந்த மனீஷா தலைமையிலான தன்னார்வலர்கள் அந்த பெண்ணுக்கு மருந்து வாங்கி கொடுத்து பராமரித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com