வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறண்ட சின்னாறு நீர்த்தேக்கம் - பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் சின்னாறு நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. இதனை பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் வறண்ட சின்னாறு நீர்த்தேக்கம் - பராமரிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பச்சைமலையில் மேலப்புலியூர் மற்றும் லாடபுரம் பகுதியில் சின்னாறு உற்பத்தியாகிறது. சின்னாறு பெரம்பலூர், வேப்பந்தட்டை தாலுகா, குன்னம் தாலுகா வழியாக பாய்ந்து வெள்ளாற்றில் கலந்து அங்கிருந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. சின்னாற்றின் கரையில் திருச்சி- சென்னை நான்கு வழிச்சாலையில் எறையூர் சர்க்கரை ஆலை பஸ்நிறுத்தமான சின்னாறு பகுதியில் ஏறத்தாழ 700 ஏக்கர் பரப்பில் அமைந்த நீர்த்தேக்கம் உள்ளது. சின்னாறு நீர்த்தேக்கம் 9 ஆயிரம் அடி நீளமும், 10 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த நீர்த்தேக்கத்தில் நிரம்பினால் வினாடிக்கு 10,675 கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

சின்னாறு நீர்த்தேக்கம் வாயிலாக சின்னாறு பகுதி எறையூர், பள்ளக்காடு, சிறுமத்தூர் கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யத்தவறியதால் சின்னாறு நீர்த்தேக்கத்தில் தண்ணீர் வரத்து இல்லை. ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலத்தில் ஓரளவு தண்ணீர் தேங்கி நிற்கும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யத்தவறியதால் சிறிதளவும் நீரின்றி முற்றிலும் சின்னாறு நீர்த்தேக்கம் வறண்டுபோய் கட்டாந்தரையாக காட்சி அளிக்கிறது.

ஆடுகள் மேய்த்து பட்டி அமைக்கும் தொழிலாளர்கள் தங்களது ஆட்டு பட்டிகளை சின்னாறு நீர்த்தேக்கத்திற்கு கொட்டகைகளாக அமைத்து தங்கியுள்ளனர். 21.2.1958-ல் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது, சென்னை மாகாண மராமத்து இலாகா அமைச்சராக இருந்த கக்கன் திறந்துவைத்த சின்னாறு நீர்த்தேக்கம், தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

சின்னாறு பூங்கா சென்னை- திருச்சி நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திட்டத்தின் போது அகற்றப்பட்டு விட்டது. வாகனங்களில் செல்லும் வழிப்பயணிகள் இங்கு உணவருந்திவிட்டு உணவு கழிவுகள், பாக்குமரத்தட்டுகள், மினரல் குடிநீர் பாட்டில்களை இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து நீர்வெளியேறும் மதகில் போட்டு மாசுபடுத்திவிட்டு செல்கின்றனர். மதுபான பிரியர்கள் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்கள் மற்றும் குடிநீர் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை அப்படி போட்டு சென்றுவிடுகின்றனர். இன்னும் பலர் இந்த நீர்தேக்க மதகு பகுதியை கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர்.

சின்னாறு நீர்த்தேக்கத்தில் ஏற்கனவே இருந்த பூங்காவை மீண்டும் அமைக்க வேண்டும். நீர்த்தேக்கம் மாசு அடையாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மாவட்ட கலெக்டருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com