நடந்தே பீகார் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் பவானியில் தடுத்து நிறுத்தம்

நடந்தே பீகார் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் பவானியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
நடந்தே பீகார் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் பவானியில் தடுத்து நிறுத்தம்
Published on

பவானி,

சென்னிமலை, பெருந்துறை, நசியனூர், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் உள்ளன. இந்த சாயப்பட்டறைகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்தார்கள். இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவு காரணமாக சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. இதனால் வேலை இழந்த வடமாநில தொழிலாளர்கள் கடந்த 45 நாட்களாக தங்களிடம் இருந்த பணத்தை வைத்து சமாளித்து வந்தனர்.

இதற்கிடையே கையில் இருந்த பணம் தீர்ந்துவிட்டதால் உணவுக்கே சிரமப்பட்டனர். இதனால் அவர்கள் சொந்த ஊருக்கே செல்ல முடிவு செய்தார்கள்.

சொந்த ஊருக்கு செல்ல முறையாக அனுமதிபெற்று வாகனங்களை வாடகைக்கு வைத்துக்கொண்டு செல்ல வழியில்லாததால், இவர்களில் சிலர் நடந்தே பீகார் செல்ல முடிவு செய்தார்கள்.

அதன்படி பீகாரை சேர்ந்த 26 பேர் மூட்டை முடிச்சுகளுடன் நடந்த சென்றுகொண்டு இருந்தனர். பவானி லட்சுமி நகரில் தற்காலிக போலீஸ் சோதனை சாவடி உள்ளது. நேற்று பகல் 2 மணி அளவில் இந்த சோதனை சாவடிக்கு வந்த 26 பேரையும் அங்கு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். பின்னர் தொழிலாளர்களிடம் மாவட்டம் விட்டு மாவட்டம் அனுமதியின்றி செல்லக்கூடாது. ஆனால் நீங்கள் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதாக கூறுகிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது என்றார்கள். அதற்கு அவர்கள், எங்களுக்கு உணவுக்கே வழியில்லை. நாங்கள் வேலை செய்த சாயப்பட்டறையின் உரிமையாளர்களும் எங்களுக்கு உதவவில்லை. 11 நாட்கள் நடந்தால் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கே சென்றுவிடுவோம் என்றார்கள்.

ஆனாலும் போலீசார் தொழிலாளர்களை நடந்து செல்ல அனுமதிக்கவில்லை. அவர்கள் வேலை செய்த சாயப்பட்டறைகளின் உரிமையாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டார்கள். பின்னர் உரிமையாளர்களிடம், தொழிலாளர்களுக்கு தேவையான தங்கும் வசதி, உணவு ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கூறினார்கள்.

அதன்பின்னர் தடுத்து நிறுத்திய 26 பேரையும் அவரவர் வேலை செய்த ஊர்களுக்கே திருப்பி அனுப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com