

வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர், பொத்தேரி, மாடம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கட்டிட வேலைகள் பெரும்பாலும் நடைபெறாத காரணத்தால், இந்த பகுதியில் உள்ள பீகார் மாநிலத்தை சேர்ந்த 28 தொழிலாளர்கள் நேற்று மாலை கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை வழியாக சென்னை நோக்கி மூட்டை முடிச்சுகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கூடுவாஞ்சேரி சிக்னல் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்த கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் சாலையில் நடந்து சென்ற வட மாநிலத்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தார். அப்போது அவர்கள் நடந்தே சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து ரெயில் மூலம் பீகாருக்கு செல்லப்போவதாக அவரிடம் தெரிவித்தனர்.
9 பேர் மட்டும்
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் சென்னைக்கு நீங்கள் நடந்து செல்லக்கூடாது. அரசு அறிவித்தபடி இ.பாஸ் உள்ளவர்கள் மட்டுமே ரெயில் மூலம் தங்கள் ஊருக்கு செல்ல முடியும். மற்றவர்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்று அவர்களிடம் கூறினார். அப்போது 28 பேரில் 9 பேர் மட்டும் இ.பாஸ் வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் இ.பாஸ் வைத்திருந்த 9 பேரை மட்டும் தனியாக தமிழக அரசின் மாநகர பஸ்சில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 19 பேரை அவரவர் ஏற்கனவே தங்கி பணிபுரியும் இடத்திற்கு போலீசார் வாகனம் மூலம் திருப்பி அனுப்பி வைத்தனர்.