வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கோவைக்கு ஒரு விமான சேவை கூட வழங்கப்படவில்லை - பயணிகள் அதிர்ச்சி

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கோவை விமான நிலையத்துக்கு ஒரு சேவை கூட வழங்கப்படாதது கொங்கு மண்டல பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கோவைக்கு ஒரு விமான சேவை கூட வழங்கப்படவில்லை - பயணிகள் அதிர்ச்சி
Published on

கோவை,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வந்தே பாரத் திட்டம் மற்றும் பபுள் பிளைட் சர்வீஸ் என்ற திட்டங்களின் கீழ் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவையை வழங்குகிறது. இதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பபுள் பிளைட் சர்வீஸ் என்பது இருநாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒப்பந்தமாகும். உதாரணத்துக்கு இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு இரண்டு விமானங்களை இயக்கினால் பதிலுக்கு சிங்கப்பூரும் அதே எண்ணிக்கையில் இரண்டு விமானங்களை இந்தியாவுக்கு இயக்க வேண்டும் என்பதேயாகும்.

தற்போது வெளியிடப்பட்ட விமான சேவை அட்டவணையின்படி ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அந்த பட்டியலில் திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை விமான நிலையத்துக்கு ஒரு விமான சேவை கூட வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஏர் இந்தியா, கோவை அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், பொதுவாக ஒரு விமான சேவை வழங்குவதற்கு அதிக பயணிகள் தேவை. வெளிநாடுகளில் வசிக்கும் பயணிகள் அந்த நாடுகளில் உள்ள தூதரக அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கின்றனர். 100-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு நாட்டின் தூதரகத்தை தொடர்பு கொண்டு ஒரு குறிப்பிட்ட நகரத்துக்கு விமான சேவை வழங்குங்கள் என்று கேட்டால் நிச்சயமாக அந்த தூதரகம் மூலம் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமான சேவை வழங்கப்படும். இவை எல்லாவற்றுக்கும் மேல் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமான சேவையை வழங்குவது, விமான நிலையங்களை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசு தான் முடிவு செய்கிறது என்றார்.

இதுகுறித்து கொங்கு குளோபல் அமைப்பின் இயக்குனர் நந்தகுமார் கூறியதாவது:-

இந்த முறையும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கோவை விமான நிலையத்துக்கு எந்த ஒரு விமான சேவையும் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. இந்த விமான நிலையத்தை ஒரு ஆண்டில் லட்சகணக்கான பயணிகள் பயன்படுத்துகிறார்கள். அதிக வருமானத்தையும் ஈட்டி தருகிறது. ஆனால் ஒரு விமான சேவை கூட வழங்காதது கோவை விமான நிலையத்தை பயன்படுத்திவரும் கோவை மட்டுமல்லாமல் கொங்கு மண்டல பயணிகள் வேறு விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கியுள்ளது. மேலும் பல விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று கூறியுள்ளது. இரண்டாம் கட்ட பட்டியலில் தமிழகத்தின் திருச்சி விமான நிலையம் உள்ளது. கோவை விமான நிலையம் மூன்றாவது பட்டியலில் இருந்ததாகவும் ஆனால் சமீபத்தில் இரண்டாம் கட்ட பட்டியலில் கோவை மற்றும் கோழிக்கோடு விமான நிலையங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com