கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 453 கடைகளுக்கு நோட்டீஸ்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 453 கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 453 கடைகளுக்கு நோட்டீஸ்
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக திருவண்ணாமலை மட்டுமல்லாது சென்னையிலும் கடைகள், கட்டிடங்கள், நிலங்கள் உள்ளன. இதில் திருவண்ணாமலையில் 173 கடைகளும் சென்னை ராயப்பேட்டை, அடையாறு பகுதியில் 280 கடைகளும் என மொத்தம் 453 கடைகளை வாடகைக்கு எடுத்த கடைக்காரர்கள் வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

நிலுவை பாக்கியை வசூல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டதின் பேரில் இந்த 453 கடைகளின் உரிமையாளர்களுக்கும் வருகிற 25-ந் தேதிக்குள் வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் ஜெகன்னாதன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் முன்பு முடி திருத்தும் நிலையம் அருகே சுகாதார வளாகம் செயல்பட்டு வந்தது. சில காரணங்களுக்காக சுகாதார வளாகம் குளியலறையாக மாற்றம் செய்யப்பட்டு பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கழிவறை வசதி இல்லை என கோவில் நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மீண்டும் ராஜகோபுரம் முன்பு உள்ள குளியலறையை கழிவறையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் வகையில் கோவிலின் 4 வாசல்களிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நிருதிலிங்கம் தீர்த்த குளத்திற்கு பவுர்ணமி நாட்களில் வரும் பக்தர்கள் குளத்தில் இறங்குகிறார்கள். எனவே அசம்பாவிதத்தை தடுக்க நிருதிலிங்கம் குள கரையோரம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி ரூ.3 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகள் கண்டறியப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com