போதிய அளவு மழை பெய்தும் வறண்டு காணப்படும் நொய்யல் ஆறு, குளங்கள்

கோவை மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்தும் நொய்யல் ஆறு மற்றும் குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.
போதிய அளவு மழை பெய்தும் வறண்டு காணப்படும் நொய்யல் ஆறு, குளங்கள்
Published on

கோவை,

கோவை மாவட்டம் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் மழை பெறுகிறது. கோவை மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 672 மி.மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் நடப்பு ஆண்டில் 665 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 7 மி.மீட்டர் குறைவு. வடகிழக்கு பருவமழை டிசம்பர் இறுதி வரை பெய்யும் என்பதால் மீதியுள்ள 7 மி.மீட்டர் மழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் ஆண்டு சராசரி அளவுக்கு மழை பெய்த போதிலும் நொய்யல் ஆறு வறண்டு காணப்படுகிறது. கோளராம்பதி, பேரூர் சொட்டையாண்டி, பேரூர் பெரிய குளம், வேடப்பட்டி புதுக்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் நிரம்பவில்லை. நிலத்தடி நீர்மட்டம் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் குறைவு என்றும், எனவே மழை பெய்தும் பலன் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கான காரணங்கள் குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

வெப்பம் அதிகரிப்பு காரணம்

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 210 மி.மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் அதை விட அதிகமாக 320 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை 327 மி.மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் 216 மி.மீட்டர் தான் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையை விட தென்மேற்கு பருவமழை மூலம் கோவையில் அதிக மழை பெய்துள்ளது. ஆனால் அந்த மழை பரவலாக பெய்ய வில்லை.

இதற்கு காரணம் வெப்பம் அதிகமாக இருப்பது தான். மரங்கள் குறைவாக இருப்பதால் வெப்பம் அதிகரித்து மழை பெய்வதற்கான குளிர்ந்த சூழ்நிலை இல்லாததே மழை பொய்த்து போவதற்கு காரணம் ஆகும். விவசாயம் குறைந்து போனதும் மழை பெய்யாததற்கு மற்றொரு காரணம். விவசாய நிலங்கள் இருந்தால் அந்த பகுதி குளிர்ந்து மழை பெய்ய வாய்ப்பிருக்கும். ஆனால் அந்த நிலையும் கோவையில் தற்போது குறைந்து வருகிறது.

பலன் இல்லை

கடலோர மாவட்டங்களில் மழை பெய்து அங்கிருந்து புறப்படும் காற்று உள்மாவட்டமான கோவை யை அடையும் போது இங்கு நிலவும் வறண்ட வானிலை காரணமாக மழை பெய்வதில்லை. கோவை மாவட்டத்தில் மழை பெய்ய வேண்டும் என்றால் குளிர்ந்த காற்று வீசும் மரங்களை அதிக அளவில் வளர்க்க வேண்டும். மேலும் பூமியை வெப்பப்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு ஆகியவை உற்பத்தியாகாமல் தவிர்க்க வேண்டும்.

மேலும் மழை பெய்யும் போது அவற்றை தேக்கி வைக்கவும் நாம் தவறி விடுகிறோம். மழை தண்ணீ ரை தேக்கி வைத்தால் நிலத்தடிநீர் மட்டம் உயரும். ஆனால் அந்த தண்ணீரையும் நாம் தேக்கி வைப்பது இல்லை. கோவை மாவட்டத்தில் போதிய அளவு மழை பெய்த போதிலும் அதனால் எந்த பலனும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com