நொய்யல் கரையோரம் குப்பை கழிவுகளை கொட்டும் மாநகராட்சி வாகனங்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

வீரபாண்டி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நொய்யல் கரையோரம் மாநகராட்சி வாகனங்கள் கொட்டி செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
நொய்யல் கரையோரம் குப்பை கழிவுகளை கொட்டும் மாநகராட்சி வாகனங்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு
Published on

வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் டையிங் கம்பெனிகள் செயல்பட்டு வருகிறது. இதில் அதிகமான டையிங் கம்பெனிகளில் நொய்யல் கரையோரம் செயல்படுகிறது. பனியன் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் நொய்யல் கரையோரம் இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர். இதனால் வீரபாண்டி சுற்றியுள்ள பகுதிகளில் நொய்யல் கரையோரங்களில் சாயக்கழிவுகள், பனியன் கழிவுகளும் ரசாயனம் (கெமிக்கல்கள்) கலந்து கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக வீரபாண்டியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி வாகனங்கள் மூலமாக நொய்யல் கரையோரம் கொட்டிச் செல்வதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது.

வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வீரபாண்டி பகுதியில் இருந்து சங்கிலி பள்ளம் உள்ள சாலை வரை நொய்யல் கரையோரம் சாலை செல்கிறது. தினமும், பள்ளி மாணவர்கள் முதல் பனியன் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணம் செய்து வருகின்றன.

நொய்யல் கரையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகள், கட்டிட கழிவுகள் மற்றும் பனியன் கழிவுகளால் துணியைக் மூக்கில் கட்டிக் கொண்டு செல்கின்றனர். அந்த அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரங்களில் பனியன் கழிவுகளுக்கு சிலர் தீ வைத்து செல்கின்றனர். இதனால் அவ்வழியாக பயணம் செய்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதோடு, கண் எரிச்சலும் ஏற்படுவது உண்டு. தற்போது மாநகராட்சி நிர்வாகமே பல்வேறு பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகளை நொய்யல் கரையோரம் கொட்டி செல்வது வேதனைக்குரிய விஷயமாகும். விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டும். நொய்யல் கரையோரம் சாய கழிவுகளை கொட்டுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com