என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையேயான அமைச்சரவை விரிவாக்க உடன்பாடு சுமுகமாக முடிந்தது முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையே அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. இடையேயான அமைச்சரவை விரிவாக்க உடன்பாடு சுமுகமாக முடிந்தது முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி சிறப்பாக நடக்கிறது. அரசு எடுத்த தொடர் நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது.

இதற்காக கவர்னருக்கும், முதல்-அமைச்சருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதுவைக்கு தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா ரூ.3 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. அந்த தொகை 2 தவணையாக வழங்கப்பட உள்ளது. அதற்கான நிதியை உருவாக்குவதில் தான் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் புதுவை மாநிலத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம். இதற்காக ஓரணியில் நிற்க தயாராக உள்ளோம்.

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக எங்கள் கூட்டணியில் பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. முதல்-அமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தான் சற்று காலதாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையின் போது விட்டுக்கொடுத்து சென்று உள்ளோம். இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

இதைத்தொடர்ந்து தொடக்கத்தில் கேட்ட 3 அமைச்சர் பதவிகள் கிடைத்துள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கூட்டணி என்றாலே விட்டுக் கொடுத்து தான் செல்ல வேண்டும். அதன்படி தற்போது விட்டுக் கொடுத்துள்ளோம். இது தொடர்பான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார் என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.

பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் கூறுகையில், கொரோனா 2-வது அலையை பிரதமர் மோடி சிறப்பாக கட்டுப்படுத்தி உள்ளார். இதற்காக உலக நாடுகள் அவரை பாராட்டி உள்ளன. புதுவையில் 2 மாதத்துக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பா.ஜ.க. செய்து வருகிறது. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு பா.ஜ.க. எந்த விதத்திலும் நிர்பந்திக்கவில்லை. எந்தவித நெருக்கடியும் கொடுக்கவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com