கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்: திருபுவனையில் பரபரப்பு

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்: திருபுவனையில் பரபரப்பு
Published on

திருபுவனை,

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கடந்த 5-ந் தேதி கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ.வுக்கும், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பஞ்சாயத்து ஆணையரை எம்.எல்.ஏ. தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் கடந்த 7-ந் தேதி புதுச்சேரி நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களான டி.பி.ஆர்.செல்வம் (மண்ணாடிப்பட்டு), கோபிகா (திருபுவனை) ஆகியோர் தலைமையில் அவர்களுடைய ஆதரவாளர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று காலை திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவகலம் முன் திரண்டனர். திடீரென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருபுவனை, மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும், மக்கள் பிரச்சினையை தீர்க்காத கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமாரை உடனடியாக இடமாற்றம் செய்யவேண்டும், அரசின் திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள், ஊரடங்கு காலத்தில் கூட்டம் கூடக்கூடாது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும், தங்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உயர்அதிகாரிகளுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com