

புதுச்சேரி,
உழவர்கரை நகராட்சி ஆணையர் அஸ்வின் சந்துரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதுச்சேரி நகராட்சி சட்டம் 1973-க்கு புறம்பாக சாலைகளை ஆக்கிரமித்து கட்டுமானங்கள், விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர். இதனை நகராட்சி மூலம் அகற்றக்கோரி பலமுறை எச்சரித்தும், ஆக்கிரமிப்பு பதாகைகள் பறிமுதல் செய்தும், கட்டுமானங்களை அகற்றியும் வியாபாரிகள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே விளம்பர பதாகைகள், கட்டுமானங்களை வருகிற 22-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பதாகைகள், கட்டுமானங்களை அகற்றுவது மட்டுமின்றி அவர்களது உரிமத்தை திரும்ப பெறவும், வணிக வளாகத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.