ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் 2-வது நாளாக இடிப்பு

கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் நேற்று 2-வது நாளாக இடித்து அகற்றப்பட்டன.
ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் 2-வது நாளாக இடிப்பு
Published on

கடலூர்,

கடலூர் கெடிலம் ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக கரைகளில் ஆக்கிரமித்து கட்டிப்பட்டிருந்த கட்டிடங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது. இதை பெற்ற அவர்கள் உரிய காலஅவகாசம் கேட்டனர். ஏற்கனவே போதுமான அவகாசம் வழங்கப்பட்டு விட்டதால் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி நேற்று முன்தினம் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டி இருந்த 120 வீடுகளை பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினருடன் இணைந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டதும் அப்பகுதி மக்கள் வசிக்க இடமின்றி அப்பகுதி சாலைகளில் குடும்பத்தோடு விடிய, விடிய படுத்து தூங்கினர். கைக்குழந்தைகளுடன் சிலர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் பாய் விரித்தும், துணிகளை விரித்தும் படுத்து தூங்கியதை காண முடிந்தது.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக ஆக்கிரமிப்பு வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றப்பட்டன. பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்த இடங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை தாங்களே எடுத்து, காலி செய்து கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்கினர். இது பற்றி வருவாய்த்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 120 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 120 வீடுகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com