‘தொற்று இல்லை’ என்ற சான்றிதழ் இல்லாமல் கேரளாவில் இருந்து சென்னை வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

கொரோனா ‘நெகட்டிவ்’ (தொற்று இல்லை) சான்றிதழ் இல்லாமல் கேரளாவில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
‘தொற்று இல்லை’ என்ற சான்றிதழ் இல்லாமல் கேரளாவில் இருந்து சென்னை வந்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
Published on

சென்னை,

நாட்டிலேயே கேரள மாநிலத்தில்தான் கொரோனா கட்டுக்குள் வராமல் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே கேரளா எல்லைகளில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வருவதற்கு ஆகஸ்டு 5-ந்தேதி முதல் (நேற்று) 2 தவணை தடுப்பூசி செலுத்திய ஆவணம் அல்லது கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொல்லை இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அதன்படி கேரளாவில் இருந்தும், கேரள மாநிலம் வழியாக வந்த ரெயில்களிலும் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று வருகை தந்த பயணிகளை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில் தலைமையிலான குழுவினர் கண்காணித்தனர். பயணிகளை ஒரே வரிசையில் நிற்க வைத்து அவர்களிடம், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திய ஆவணம் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர். இதில் 2 ஆவணங்களும் இல்லாமல் வருகை தந்த பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். கருவி மூலம் கொரோனா பரிசோதனையை மாநகராட்சி சுகாதார குழுவினர் மேற்கொண்டனர்.

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நேற்று 33 பயணிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த பரிசோதனை முடிவு வெளிவரும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற அறிவுரையுடன் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். விமான பயணத்தை பொறுத்தவரையில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே, விமானத்தில் பயணிக்கும் போர்ட்டிங் பாஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com