

திண்டுக்கல்,
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள், அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா, திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
இதில் தொடக்கக்கல்வி இயக்கக இணை இயக்குனர் பாஸ்கரசேதுபதி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, 376 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்கினார்.
விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ஒரு மாணவனுக்கு கல்வியை கொடுத்துவிட்டால், அதை கொண்டு அனைத்தையும் பெற்று விடலாம். எனவே, தான் ஜெயலலிதா போன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார். முதல்-அமைச்சரின் புதிய சிந்தனை 7.5 சதவீத உள்இடஒதுக்கீடு ஆகும். அதோடு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்றது. இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை நனவாக்கினார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகத்துக்கு முதலிடம் கிடைத்தது. இதேபோல் அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது, என்றார்.
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கல்வித்துறை மீது தனி கவனம் செலுத்தினார். இதனால் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மட்டுமின்றி நோட்டுகள் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கினார். அவருடைய வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொற்கால ஆட்சியை நடத்துகின்றனர். இந்த ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும், என்றார்.
இதில் கலெக்டர் விஜயலட்சுமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், எம்.எல்.ஏ.க்கள் தேன்மொழி சேகர், பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் செந்தில்வேல்முருகன் நன்றி கூறினார்.