

பெங்களூரு,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் பெங்களூருவுக்கு வந்தார்.
பின்னர் அவர் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி புல்லாபுரவில் ரூ.1,500 கோடி செலவில் அதிவிரைவுப்படை பயிற்சி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
பின்னர் பெங்களூரு திரும்பிய அமித்ஷா பெங்களூரு விதானசவுதாவில் நடந்த கர்நாடக போலீஸ் துறையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து பா.ஜனதாவினர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இரவில் பெங்களூருவில் ஒரு ஓட்டலில் தங்கினார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் புதிதாக மந்திரி பதவி ஏற்றுள்ள முருகேஷ் நிரானிக்கு சொந்தமான நிரானி குழுமம் சார்பில் பாகல்கோட்டை மாவட்டம் கெரகல்மட்டி கிராமத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அந்த திட்டங்களை தொடங்கி வைத்து அவர் பேசுகையில் கூறியதாவது:-
விவசாயத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை பிரதமர் மோடி அதிகரித்துள்ளார். பல்வேறு விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி அரசின் முன்னுரிமை என்னவென்றால், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவது தான். இந்த நோக்கத்தில் தான் மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயரும்.
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா, விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவர் எந்த திட்டத்தையும் விட்டு வைக்கவில்லை. மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. பசல் பீமா திட்டத்தின் கீழ் பயிர்க்காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இந்த திட்டங்களை ஏன் வழங்கவில்லை?. காங்கிரஸ் கட்சியின் நோக்கம் சரியானதாக இருக்கவில்லை.
விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது தான் பிரதமர் மோடியின் அரசு. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை கர்நாடக அரசும் நிறைவேற்றியுள்ளது. இதற்காக எடியூரப்பாவை நான் பாராட்டுகிறேன். இந்த சட்டங்களால் விவசாயிகளின் வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யும் விளைபொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ள இந்த புதிய வேளாண் சட்டங்கள் அனுமதி வழங்கியுள்ளன.
கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய யாருக்கும் தைரியம் இருக்கவில்லை. நீங்கள் மோடியை பிரதமர் ஆக்கினீர்கள். அதன் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம். அதை இந்தியாவுடன் நிரந்தரமாக இணைத்துள்ளோம். காஷ்மீரில் தற்போது தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. எங்கும் ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை. காஷ்மீர் நமது பகுதியாக நிரந்தரமாக மாறிவிட்டது.
எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிக ஊக்கம் அளிக்கிறார். மேலும் அவற்றின் பயன்பாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதனால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். அது மட்டுமின்றி சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். நம்மிடம் உள்ள அந்நிய செலாவணியில் பெரும் பகுதி பெட்ரோல்-டீசல் இறக்குமதிக்கு செலவழிக்கப்படுகிறது.
அதனால் அவற்றுக்கு மாற்றாக எத்தனால் உருவாக்கப்பட்டு வருகிறது. இது கரும்பில் இருந்து உற்பத்தி செய்யப்படும் துணை பொருள். இதன் மூலம் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்த முடியும். தற்சார்பு இந்தியா திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல மக்கள் பா.ஜனதா, மோடியை ஆதரிக்க வேண்டும்.
கடந்த 2014, 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரித்தனர். நாடாளுமன்றம், சட்டமன்றம், கிராம பஞ்சாயத்து என்று எந்த தேர்தலாக இருந்தாலும் கர்நாடக மக்கள் பா.ஜனதாவை ஆதரித்து வருகிறார்கள். இதற்காக கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
முன்னதாக பெங்களூருவில் தங்கியிருந்த அமித்ஷா விமானம் மூலம் பாகல்கோட்டைக்கு சென்றார். அங்கு அவர் அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பெலகாவிக்கு சென்றார். அங்கு அவருக்கு பா.ஜனதா தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு பாகல்கோட்டையில் விழா நடைபெற்ற பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.