

புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் கவர்னர் கிரண்பெடி நேற்று உரையாற்றினார். கவர்னர் கிரண்பெடி சட்டசபைக்கு வருவதற்கு முன்பாக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் கையில் பதாகையுடன் சட்ட சபைக்கு வந்தனர். அதில் மத்திய அரசு கொரோனா காலத்தில் மக்களுக்கு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டு இருந்தனர். மேலும் புதுவை அரசு சட்டமன்றத்தில் ஒரு நாள் முழுவதும் விவாதம் நடத்தி மக்களுக்கு கொடுத்த தொகை பூஜ்ஜியம் தான் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க. கட்சித்தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
மத்திய அரசு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 கிலோ இலவச அரிசி, ஜன்தன் வங்கி திட்டத்தின் மூலம் 3 மாதத்திற்கு ரூ.1,500 பயனாளிகள் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் இருந்து ரூ.500 கோடிக்கு மேலாக புதுச்சேரி மக்களுக்கு இந்த கொரோனா தொற்று காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசாங்கம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் வசூல் செய்த பணத்தை என்ன செய்தார் என இதுவரை தெரிவிக்கவில்லை.
மாநிலத்தில் இருக்கக்கூடிய அமைப்புசாரா தொழிலாளர்கள், கல்யாண மண்டபங்களில் வேலை செய்பவர்களுக்கும், உணவுக்கூடங்களில் வேலை செய்தவர்களுக்கும், ஓட்டல்களில் பணிபுரிபவர்களுக்கும், சலவை தொழிலாளர் என யாருக்கும் எந்த ஒரு நிவாரணத் தொகையும் இதுவரை அளிக்கவில்லை. அதை பற்றிய எந்த ஒரு விவாதமும் சட்டசபையில் நடைபெறவில்லை. இதை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.