மத்திய அரசின் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு

மத்திய அரசின் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
மத்திய அரசின் ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேச்சு
Published on

திருச்சி,

திருச்சியை அடுத்த சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை விழிப்புணர்வு மற்றும் மாவட்ட அளவிலான உழவர் பெருவிழா நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் விவசாயம் தொடர்பான பயிற்சி கையேடுகளை வெளியிட்டு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

திருச்சி மாவட்ட விவசாயிகள் வேளாண்மைக்காக பயன்படுத்தும் நிலத்தின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இருக்கும் நிலங்களை பயன்படுத்தி உணவு உற்பத்தியை பெருக்கவும், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருக்கவும் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கவும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் இயங்கி வருகின்றது. இந்நிலையம் திருச்சி மாவட்டத்தின் காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளில் விவசாய பெருமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பணியாற்றி வருகிறது.

மாவட்டத்தின் வேளாண் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் வேளாண்மை தொழில் நுட்பங்களின் உறைவிடம் மற்றும் அறிவுசார் மையமாக செயல்பட்டு சகோதரத்துறைகள், தனியார் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை ஊக்குவித்தல், இவ்வாறு பல்வேறு செயல்பாடுகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை விரிவாக்கம் செய்துவரும் நம் வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் இன்றைய நாட்களின் முக்கிய பிரச்சினையான, நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வண்ணம் ஜல்சக்தி அபியான் திட்டம் என்னும் நீர் மேலாண்மை விழிப்புணர்வு தொழில்நுட்ப, மாவட்ட அளவிலான உழவர் பெருவிழா முக்கியமான ஒன்றாக நடத்தப்படுகிறது. வறட்சி, பருவமழை பொய்ப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் நீர் பற்றாக்குறையானது இன்றைய காலகட்டத்தில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் ஒரு பெரும் கேள்விக்குறியாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் நூர்ஜகான், வேளாண்மை இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com