பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் மோசடி: உசிலம்பட்டி விவசாய அதிகாரி உள்பட 2 பேர் கைது

பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் நடந்த மோசடி தொடர்பாக உசிலம்பட்டி வட்டார விவசாய அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் மோசடி: உசிலம்பட்டி விவசாய அதிகாரி உள்பட 2 பேர் கைது
Published on

மதுரை,

பிரதமரின் விவசாய நிதி உதவி திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு மத்திய அரசு தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்தில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடந்த மோசடியில் வேளாண்துறை அலுவலர்கள், இ-சேவை மைய ஊழியர்கள் என பலரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்திலும் இந்த திட்டத்தில் மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இம்மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து 16,474 பேர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 13,077 பேர் தகுதியற்றவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களில் அனைவருக்கும் முதல் தவணையும், பாதி பேருக்கு 2-ம் தவணையும் வங்கி கணக்கில் நிதியுதவி வரவு வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து 13 யூனியன்களில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து அதை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாவட்டத்தில் சுமார் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக வேளாண்மைத்துறை இணை இயக்குனர் விவேகானந்தன், 13 யூனியங்களில் உள்ள இ-சேவை கணினி மைய ஊழியர்கள், புரோக்கர்கள் என 17 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். புகாரில் தெரிவித்த உசிலம்பட்டி, பேரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 17 பேரும் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே வேளாண்மைத்துறை இணை இயக்குனர் விவேகானந்தன் மற்றும் உதவி அதிகாரிகள் 2 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மேலும் மோசடி தொடர்பாக எழுந்த புகாரை தொடர்ந்து 13 யூனியனில் வேளாண்மைத்துறையில் பணியாற்றிய அக்ரி தொழில்நுட்ப மேலாளர், வட்டார தொழில்நுட்ப மேலாளர் என 62 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அவர்களுக்கும் இ-சேவை கணினி மைய ஊழியர்கள், புரோக்கர் கள் ஆகியோருக்கும் உள்ள தொடர்பு குறித்து போலீஸ் விசாரணை நடந்து வந்தது.

அதில் மதுரை மாவட்டம் பேரையூர் அல்லிகுண்டம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் (வயது 45) என்பவர் உசிலம்பட்டியில் இ-சேவை கணினி மையம் வைத்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரும், உசிலம்பட்டி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாக்ரடீஸ்பாண்டி (29) ஆகியோரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இவர்கள் தகுதியற்ற எத்தனை பேருக்கு உதவித்தொகையை பெற்றுக்கொடுத்துள்ளனர், அதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் கைது செய்யப்பட்ட சாக்ரடீஸ்பாண்டி கடந்த 30-ந் தேதி உசிலம்பட்டி பகுதியில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உதவி கமிஷனர் வேல்முருகன் கூறும்போது, உசிலம்பட்டி பகுதியில் விவசாயிகள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் கணினி மைய நிர்வாகி விஸ்வநாதன் அனைத்து தகவல்களையும் பதிவு செய்து விண்ணப்பத்தை, அந்த பகுதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாக்ரடீஸ்பாண்டிக்கு அனுப்ப வேண்டும். அவர் அனைத்து விண்ணப்பங்களையும் சரிபார்த்து ஒப்புதல் அளிப்பது தான் முறை. ஆனால் சாக்ரடீஸ்பாண்டி விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்க அரசு தெரிவித்த கடவுச்சொல்லையும் கணினி மைய நிர்வாகி விஸ்வநாதனிடம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் கணினி மைய நிர்வாகி அவரே விண்ணப்பத்தை பதிவு செய்து, அதற்கு ஒப்புதல் பெற்று கொடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து தான் இருவரையும் கைது செய்துள்ளோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com