வங்கி அதிகாரி செல்போனில் பெண்களின் ஆபாச படங்கள் தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்

வங்கி அதிகாரி செல்போனில் பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்து வைத்திருப்பது குறித்து மனைவி தட்டிக்கேட்டார். அவருக்கு வங்கி அதிகாரி கொலை மிரட்டல் விடுத்ததால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வங்கி அதிகாரி செல்போனில் பெண்களின் ஆபாச படங்கள் தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்
Published on

கள்ளப்பெரம்பூர்,

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த லூயிஸ் விக்டர் மகன் எட்வின் ஜெயக்குமார்(வயது 36). இவர், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு வங்கியில் காசாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும், தஞ்சையை அடுத்த கள்ளப்பெரம்பூர் அருகே உள்ள வகாப் நகரை சேர்ந்த அருள்மணி மகள் தாட்சருக்கும்(32) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணப்பாறையில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மணப்பாறையில் குடும்பம் நடத்தி வந்தனர்.

திருமணமான சில நாட்களிலேயே எட்வின் ஜெயக்குமாரின் நடவடிக்கை மீது தாட்சருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இரவில் எட்வின் ஜெயக்குமார் செல்போனிலேயே மூழ்கி இருந்தது, தாட்சரை எரிச்சல் அடைய செய்தது. மேலும் 50 பவுன் நகைகளை வரதட்சணையாக தரும்படி எட்வின் ஜெயக்குமார், தாட்சரை வற்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கணவரின் நடவடிக்கையால் சந்தேகம் அடைந்த தாட்சர், கணவரின் செல்போனை பார்த்தபோது அதில் எட்வின் ஜெயக்குமார் பல பெண்களுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. அவற்றில் பல ஆபாசமாக இருந்தன.

மேலும் பல பெண்களின் வங்கி கணக்குகள் குறித்த விவரங்கள், அவர்களின் படங்கள் செல்போனில் பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் தாட்சர் பார்த்துள்ளார்.

மேலும் எட்வின் ஜெயக்குமார் தனது செல்போனில் வங்கிக்கு வந்த பெண் வாடிக்கையாளர்கள் மற்றும் அக்கம், பக்கத்தில் வசித்து வரும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தாட்சர், இந்த ஆபாச படங்கள் தொடர்பாக எட்வின் ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எட்வின் ஜெயக்குமார், தாட்சருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆபாச படங்கள் குறித்து வெளியில் சொன்னால், எனது செல்போனில் வைத்து உள்ள உன்னுடைய ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என தாட்சரை மிரட்டி உள்ளார்.

இதைத்தொடர்ந்து மணப்பாறை அருகே உள்ள மலைப்பகுதியான மனையேறிப்பட்டிக்கு தாட்சரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற எட்வின் ஜெயக்குமார் மலையில் வைத்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இதனால் பயந்துபோன தாட்சர், தஞ்சையில் உள்ள தனது சகோதரருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை, எட்வின் ஜெயக்குமார் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் தாட்சர், தனது கணவர் மீது தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் மற்றும் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் எட்வின்ஜெயக்குமாரின் செல்போனில் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதும், இதை தட்டிக்கேட்ட தாட்சருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் எட்வின் ஜெயக்குமார், அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய தாய் லில்லி ஹைடா, சகோதரி நிர்மலா மேரி, உறவுப்பெண் ரீட்டா மற்றும் எட்வின் ஜெயக்குமாருடன் வங்கியில் வேலை பார்த்து வரும் தேவி பிலோமினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதை அறிந்த எட்வின் ஜெயக்குமாரும், அவருடைய குடும்பத்தினரும் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். அதேபோல தாட்சரும் மதுரை ஐகோர்ட்டில் பல ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோர்ட்டு, எட்வின் ஜெயக்குமாருக்கு அளித்திருந்த முன்ஜாமீனை ரத்து செய்து அவரை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் எட்வின் ஜெயக்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com